சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.720 குறைந்தது. தங்கம் விலை கடந்த அக்டோபர் 31ம் தேதி (தீபாவளி அன்று) பவுன் ரூ.59,640க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,640க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சவரனுக்கு ரூ.440 குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.
அதாவது, கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.7,140க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.57,120க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.101க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட் விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்தது appeared first on Dinakaran.