புதுடெல்லி: ‘‘அரசியலமைப்பை உருவாக்கியவர்களும், உச்ச நீதிமன்றமும் பலமுறை வலியுறுத்தியபடி, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாடுபடுகிறோம்’’ என மக்களவையில் அரசியலமைப்பு சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது. நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது.
நாடு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும். இந்த மைல்கல்லை எட்ட ஒற்றுமை முக்கியம். எனது அரசின் கொள்கைகளைப் பார்த்தால், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சித்துள்ளோம் என்பதை காண்பீர்கள். இந்த ஒற்றுமைக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது. அதனால்தான் அதை நீக்கினோம். ஜிஎஸ்டி மூலம் பொருளாதார ஒற்றுமையைக் கொண்டு வந்தோம். ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை கிடைத்தால் அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். அதனால்தான் ஒரே நாடு, ஒரே சுகாதார அட்டை கொண்டு வந்தோம்.
அரசியலமைப்பு இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, ஆனால் முந்தைய மைல்கற்களைப் பார்த்தால். அரசியல் சாசனம் 25 ஆண்டுகள் நிறைவடையும் போது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, நாடு ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. எமர்ஜென்சியின் பாவத்தை காங்கிரசின் தலையெழுத்தில் இருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.
காங்கிரசில் ஒரு குடும்பம் அரசியலமைப்பை புண்படுத்துவதில் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. 75 ஆண்டுகளில், அந்த குடும்பம் 55 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது.
1947 முதல் 1952 வரை, நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. இடைக்கால அரசு அமைந்திருந்தது. இதை பயன்படுத்தி 1951ல் அரசியலமைப்பை அவர்கள் மாற்றினர். இது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிக்கும் செயல். அந்த நேரத்தில், ‘அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் தடையாக இருந்தால், அதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என்று நேரு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஜனாதிபதியும் சபாநாயகரும் நேருவை எச்சரித்து தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர் தனது சொந்த அரசியலமைப்பை பின்பற்றினார். அரசியலமைப்பை சீர்குலைக்கும் இந்த பழக்கத்திற்கு காங்கிரஸ் அடிமையாகிவிட்டது.
அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்தனர். கடந்த 60 ஆண்டுகளில், அரசியலமைப்பு 75 முறை மாற்றப்பட்டது. முதல் பிரதமரால் விதைக்கப்பட்ட இந்த விஷவிதை, அடுத்தடுத்த பிரதமர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்திரா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்திராகாந்தி 1971ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரத்தை வழங்குவதற்காக நமது நீதித்துறையின் சிறகுகளை வெட்டுவதற்காக அரசியலமைப்பை மாற்றினார்.
தனது தேர்தல் வெற்றி நிராகரிப்பட்டதால் 1975ல் தனது பதவியை காப்பாற்ற இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டார். தனக்கு எதிராக தீர்ப்பளித்ததற்காக நீதிபதி கன்னாவை தலைமை நீதிபதி ஆகவிடாமல் தடுத்தார். இந்தப் பாரம்பரியம் இத்துடன் நிற்கவில்லை. ஷா பானோவுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ராஜீவ் காந்தி புறக்கணித்தார், அதற்கு பதிலாக அவர் வாக்கு வங்கி அரசியலைப் பின்பற்றினார். காந்தி குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்று அரசியல் நிர்ணய சபை விவாதித்தது. அத்தகைய நடவடிக்கை நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த, காங்கிரஸ் அதை பொருட்படுத்தாமல் முன்னேறியது. மதம் சார்ந்த தனிநபர் சட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்றம் கூட பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளது. எனவே, பொது சிவில் சட்டம் மூலம் நாட்டில் மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம். இதனை சீர்த்திருத்த அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் நமக்கு புதிய ஆற்றல் தேவை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சின் போது பல இடங்களில் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
* 11 தீர்மானங்களை பரிந்துரைத்த மோடி
வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை அடைவதை உறுதி செய்ய 11 தீர்மானங்களை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார்.
* குடிமகனாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், அனைவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
* அனைத்து மதம், சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெற்ற வேண்டும்.
* ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது. ஊழல்வாதிகளை சமூகம் புறக்கணிக்க வேண்டும்.
* நாட்டின் சட்டங்கள், விதிமுறைகள் பெருமையுடன் பின்பற்றப்பட வேண்டும்
* அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற வேண்டும். தேசத்தின் பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும்.
* வாரிசு அரசியலில் இருந்து அரசியலை விடுவிக்க வேண்டும்.
* அரசியல் சாசனம் மதிக்கப்பட வேண்டும், அரசியல் லாபங்களுக்காக அரசியலமைப்பை தவறாக பயன்படுத்தக் கூடாது.
* இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ளவர்களிடம் இருந்து பறிக்கப்படக் கூடாது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மேற்கொள்ளக் கூடாது.
* பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா உலகை ஊக்குவிக்க வேண்டும்.
* மாநில வளர்ச்சியுடன் நாட்டின் வளர்ச்சியும் இணைந்து செல்ல வேண்டும்.
* ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற தேசத்தின் பெருமையையும், ஒற்றுமையும் ஓங்க வேண்டும்.
* 110 நிமிட உரை ரொம்ப போர்
பிரியங்கா காந்தி கூறுகையில்,’ மக்களவையில் 110 நிமிடங்களுக்கு மேல் பிரதமர் மோடி ஆற்றிய உரை எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. ஒரே நாளில் 2 கணித வகுப்பு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல நட்டாவுக்கும் அப்படித்தான். அவர் கையை தடவிக்கொண்டு இருந்தார். அவரை பிரதமர் பார்த்ததும், சீரியசாக உரையை கேட்பது போல் காணப்பட்டார். அமித்ஷா தலையில் கையை வைத்தபடி இருந்தார். பியூஷ்கோயல் தூக்க கலக்கத்தில் இருந்தார். இதெல்லாம் எனக்கு புதிய அனுபவம். பிரதமர் புதிதாக ஏதாவது பேசுவார் என்றால் அதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டார்.
* சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்
விவாதத்தின் போது, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, சாவர்க்கரை புகழ்ந்து இந்திராகாந்தி எழுதிய கடிதத்தை காட்டி பேசுகையில், ‘‘சாவர்க்கரை வீரமிக்க இந்தியாவின் மகன் என இந்திரா காந்தி புகழ்ந்துள்ளார். அவரது சுதந்திர போராட்ட தியாகத்தையும் மெச்சி கடிதம் எழுதி உள்ளார். அப்படியென்றால் இந்திரா காந்தி அரசியலமைப்புக்கு எதிரானவரா? சவார்க்கர் குறித்தும் நாட்டிற்கு அவரது பங்களிப்பு குறித்தும் நாங்கள் பெருமை கொள்கிறோம்’’ என்றார்.
இதற்கு பதிலளிக்க ராகுல் முயன்றதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் ஏற்பட்டது. பின்னர் பதிலளித்த ராகுல், ‘‘சாவர்க்கரை பற்றி எனது பாட்டி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘காந்தி, நேரு போன்றவர்கள் சிறைக்கு போனார்கள். சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்’ என்றார். இதுதான் இந்திராகாந்தியின் நிலைப்பாடு’’ என பதிலடி கொடுத்தார். நாட்டில் அவசர நிலையை இந்திரா காந்தி கொண்டு வந்ததை குறிப்பிட்டு பாஜ எம்பிக்கள் காங்கிரசையும், ராகுலையும் தாக்கி பேசினர்.
* கன்னி உரையில் அதானி பெயர் நீக்கப்பட்டது ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியுமான பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் மக்களவையில் முதன்முறையாக உரையாற்றினார். இந்த நிலையில் உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசையும், அதன் தலைமையையும் கோழைகள் என்று விமர்சித்த வார்த்தைகள் மற்றும் அதானி குறித்த ேபச்சுகளும் நீக்கப்பட்டன.
இதுபற்றியும், ராகுல்பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்தும் பிரியங்கா நேற்று கூறுகையில்,’ ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் பா.ஜவின் வேலை. நாடாளுமன்றத்தில் உண்மையான பிரச்னைகளைப் பேச விரும்பவில்லை. நான் பேசிய பேச்சு அதானி மட்டுமே. அதையும் நீக்கி விட்டார்கள். அதானி என்பது பேசக்கூடாத வார்த்தையா? அவர்கள் யாருடைய பெயரையும் பேசலாம். ஆனால் அதானியின் பெயரை நாங்கள் பேசக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
* ஆ.ராசா அதிரடி
திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், ‘‘அரசியலமைப்பை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ், இந்து மகா சபாவின் பங்களிப்பை சொல்ல பாஜவுக்கு துணிவிருக்கிறதா? எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது. ஆனால் உங்கள் (பாஜ) ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை ஆகிய அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜ 400 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தைத் திருத்துவோம் என்று சொன்னவர்கள்தானே நீங்கள்?’’ என்றார்.
* ராகுல் உரையை புறக்கணித்தது ஏன்?
மக்களவையில் ராகுல்காந்தி பேசும்போது , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவையில் இல்லை. இதுபற்றி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கூறுகையில்,’பிரதமர் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவையில் இருந்தார். ஆனால் ராகுல் பேசும்போது மோடி அவையில் இல்லை. ஏன் இந்த நடத்தை மிஸ்டர் பிரதமர்?’ என்று கேள்வி எழுப்பினார்.
The post மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்: மக்களவையில் பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.