×

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு; ‘காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர்’.! கார்கே, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர் என அவரது மறைவையொட்டி கார்கே, ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அதுபற்றிய விவரம்:

மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்): ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். அவர் காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்.

ராகுல் காந்தி (காங்கிரஸ்): ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை ரீதியான மற்றும் அச்சமற்ற கருத்துகளை தெரிவிக்கும் பண்புடைய அவர், காங்கிரஸ் கட்சியின் மதிப்பு மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழகத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நமக்கு உத்வேகமாக இருக்கும்.

கி.வீரமணி (திராவிட கழக தலைவர்): பெரியாரின் பேரன் என்பதில் கொள்கை உணர்வுடன் தனது பொதுவாழ்க்கையை நடத்தியவர் இளங்கோவன். அவரது மறைவு வேதனையிலும், துன்பத்திலும் வெகுவாக தாக்குகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும், ஒன்றிய அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் சரி… எப்போதும் தெளிவான கருத்துகளை பேசக்கூடியவர்.

ராமதாஸ் (பாமக): நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த இளங்கோவன், தமிழகத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்க மனம் மறுக்கிறது.

வைகோ (மதிமுக): காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து, தமிழ்நாட்டில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர். தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துக்களை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்): தன்மான தலைவர் என எல்லோரும் வாஞ்சையோடு அழைப்பார்கள். நேர்மையாகவும், மனதில் எந்தவித ஒளிவு மறைவின்றி பழகக்கூடியவர். எதிர்க்கட்சிகளை விமர்சித்தாமலும் சரி, நண்பர்களிடமும் பேசும்போதும் சரி… எந்த வித அச்சமும் இன்றி மனதில் நினைப்பதை சொல்லக்கூடியவர். சோனியாகாந்தியின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அவரது இழப்பு கட்சிக்கு ஈடு செய்யமுடியாததாகும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக பேசுபவர். இதனால் ஏற்படும் சர்ச்சைகள் பற்றி கவலைப்படாதவர். மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வலிமை பெற்று, வகுப்புவாத, மதவெறி சக்திகளை எதிர்த்து போராடும் காலத்தில் இளங்கோவன் மறைவு பேரிழப்பாகும்.

அன்புமணி (பாமக): தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்த தலைவர்களின் இளங்கோவனும் ஒருவர். தான் ஏற்ற பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட வகித்தவர். உடல்நலம் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவரது மறைவு செய்தி மனதை வாட்டுகிறது.

திருமாவளவன் (விசிக): உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பிரேமலதா (தேமுதிக): கேப்டனுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்.

ஓபிஎஸ்: ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு, காங்கிரசுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் (பாஜ): இளங்கோவன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்.

கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்): அவருக்கே உரித்தான பாணியில் தமிழக அரசியலில் களம் கண்டவர். காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களோடு பணியாற்றியவர். அவரது மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.

ஜோதி மணி எம்.பி: காங்கிரஸ் கட்சி மீது மிக பெரிய பற்றுக்கொண்டவர். எந்த காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். தனது மனதுக்குபடும் கருத்தை அழுத்தமாக உறுதியாக சொல்லக்கூடியவர்.

விஜய் வசந்த் எம்.பி: காங்கிரஸ் கட்சியின் போர் படை வீரராக விளங்கி, தன்மானத்தை பாதுகாக்க அவரது பேச்சும் எழுத்தும் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டன் மனதிலும் நிலைத்து நிற்கும். இத்தகைய ஒரு தலைவரை இழந்தது கட்சிக்கு பெரும் இழப்பாகும்.

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி): இளங்கோவன், காங்கிரஸ் தலைவராக இருந்தபோது தான், உள்ளாட்சி தேர்தலில் புதிய நீதிக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் நானும், இளங்கோவனும் தீவிர பிரசாரம் செய்தோம். அதனை இப்போதும் மறக்க முடியாது.

எர்ணாவூர் நாராயணன்: இளம் வயதிலேயே காங்கிரசில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். அவரது அனல் பறக்கும் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

வி.ஜி.சந்தோசம்: பெரும் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கவும் இறைவனை வேண்டுகிறேன்.

The post ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு; ‘காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர்’.! கார்கே, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : CONGRESS ,Garke ,Rahul ,Chennai ,Erode ,Assemblyman ,E. V. K. S Ilangovan ,Congress Bliss ,Karke ,Mallikarjuna Karke ,EVKs ,Langovan ,E. V. K. S. ILANGOWAN ,Dinakaran ,
× RELATED அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷா...