அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் குப்பை கழிவுகளை அகற்ற புதிய ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால், கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்கெட்டில் ஆய்வு செய்து, எந்த இடத்தில அதிகமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது, என கண்டறிந்து ராட்சத மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
அதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீருடன் குப்பை கலந்து துர்நாற்றம் வீசியதால், அதை அகற்றும் பணிகளையும் துரிதப்படுத்தினார். மார்க்கெட் அருகே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விற்பனை வளாகத்தில் 200 பெரிய கடைகள் மற்றும் 1,965 சிறிய கடைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 165 கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த வளாகத்தில் ேதங்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவனம் சரியான முறையில் தூய்மை பணி மேற்கொள்ளாததால், வளாகம் முழுவதும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணி மேற்கொள்ள புதிய ஒப்பந்த நிறுவனத்தை அங்காடி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இவர்கள், தற்போது தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு appeared first on Dinakaran.