சென்னை: மெட்ரோ ரயில் முதல் மற்றும் 2ம் கட்ட திட்டத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.67.2 லட்சத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1 மற்றும் கட்டம் 2ல் உள்ள ஆலந்தூர், ஆலப்பாக்கம் சந்திப்பு, போட் கிளப், நந்தனம் மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய இடங்களில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஜோன்ஸ் லாங் லசால்லே கன்சல்டன்ட் நிறுவனத்திற்கு ரூ.67.2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஆக்டோபர் மாதம் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனம், ஆலந்தூர், ஆலப்பாக்கம் சந்திப்பு, போட் கிளப், நந்தனம் மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களை கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை திட்டமிட்டுள்ளது. கட்டம் 2ல் ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறுதல் நடைபாதை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
நந்தனம் வணிக மேம்பாடு வர இருக்கும் 2ம் கட்ட திட்டத்தின் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். ஆலந்தூர் வணிக மேம்பாடு முதல் மற்றும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். விம்கோ நகர் பணிமனை நிலையம், தற்போதுள்ள மெட்ரோ கட்டிடத்திற்கு மேல் 8 மாடிகள் கொண்ட வணிக மேம்பாட்டு கட்டுமானத்தை கொண்டிருக்கும்.
ஏற்பு கடிதம் வழங்கப்பட்ட 150 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை வழங்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் மற்றும் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் முன்னிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ் மற்றும் லிவிங்ஸ்டோன் எலியாசர், ஜோன்ஸ் லாங் லசால்லே கன்சல்டன்ட் நிறுவனத்தின் இயக்குநர் சைமன் செல்வராஜ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
The post மெட்ரோ ரயில் முதல் மற்றும் 2ம் கட்ட திட்டத்தில் வணிக மேம்பாட்டு கட்டுமானத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு appeared first on Dinakaran.