ஹாங்சோ: பிடபிள்யுஎப் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா இணையை இந்திய வீராங்கனைகள் வென்றனர். பேட்மின்டன் உலகத் தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் முன்னணி வீரர்களுக்கு இடையில் ‘பிடபிள்யூஎப் பைனல்ஸ்’ போட்டி ஆண்டு இறுதியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான போட்டி சீனாவின் ஹாங்சோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஒற்றையர், இரட்டையர் ஆண்கள், பெண்கள் பிரிவுகள், கலப்பு இரட்டையர் பிரிவு என மொத்தம் 5 பிரிவுகளில் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இவற்றில் இந்தியாவுக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளது. ஏ பிரிவில் களம் காணும் இந்தியாவின் திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை முதல் சுற்றில் நேற்று முன்தினம் சீன இணையிடம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நேற்று நடந்த 2வது சுற்றில் மலேசியாவின் டினா முரளிதரன்-டன் பியர்லி இணையை எதிர்கொண்டது. இரண்டு இணைகளும் வெற்றிக்காக கடுமையாக போராடியதால் புள்ளிகள் குவிப்பதில் தாமதமானது.
எனினும் முதல் சுற்றை இந்திய இணை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது. தொடர்ந்து நடந்த 2வது சுற்றில் மலேசிய இணை ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. இருப்பினும் சமாளித்து விளையாடிய இந்திய இணை அதையும் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தியது. அதனால் 46நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் இந்திய இணை, 2வது சுற்றில் 2-0 என நேர் செட்களில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் இன்று நடைபெறும் 3வது சுற்றில் ஜப்பான் இணையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவை போலவே ஒரு சுற்றில் மட்டும் ஜப்பான் வென்றுள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் இணை அரையிறுதிக்கு கட்டாயம் முன்னேறும். ஏ பிரிவில் சீனா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மலேசியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
The post மலேசிய இணையை வீழ்த்தி திரீசா-காயத்ரி வெற்றி: பிடபிள்யூஎப் பைனல்ஸ் பேட்மின்டன் appeared first on Dinakaran.