* மக்கள் மனதளவில் மாற வேண்டியது அவசியம்
* பெரியார் நினைவகம்-நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி போராட்டங் களுக்கான தொடக்கப்புள்ளி. சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
பெரியார் நினைவகத்தில் புகைப்படக் காட்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், சிறுவர் பூங்காவும், நூலகத்தில் 5000க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழி புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டிற்கான வைக்கம் விருதினை கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு, விருதுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கேரளா கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறிய மாநிலம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மொழி உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடி எழுத்துலகில் சாதனைப் படைத்த தேவநூர மஹாதேவாவுக்கு முதலாவது ‘வைக்கம் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. 1924ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகுத்த போராட்டம். அந்தப் போராட்டத்தில், வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதானார்கள்.
இங்கிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியாருக்கு அழைப்பு வந்தது. பெரியார் ஏப்ரல் 13ம் நாள் இங்கு வந்தார். கிட்டத்தட்ட 5 மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காந்தியடிகளோடு இருக்கிறார் பெரியார். பெரியாரிடம் ஆலோசனை செய்துவிட்டுதான் திருவிதாங்கூர் ராணியை காந்தியடிகள் சந்திக்கிறார். கோயிலின் மூன்று பக்கம் முதலில் திறந்து விடப்படுகிறது. இது தொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு பெரியார் தலைமை தாங்குகிறார்.
வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925-ல் நடந்தபோது, அதில் கலந்துகொள்ள பெரியாருக்கும், நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து, அதற்குப் பிறகு பெரியார் வாழ்த்திப் பேசினார். ‘’உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்திற்கு ஏற்பட்ட மகிமை என்று பெரியார் பேசினார். இந்த வீரம் மிகுந்த போரில் மறக்க முடியாத இரண்டு பெண்கள், பெரியாரின் மனைவி நாகம்மாளும், அவருடைய தங்கை கண்ணம்மாளும். வைக்கம் போராட்டத்தில் வெற்றிகண்ட பெரியாரை அனைவரும் பாராட்டினார்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க., “வைக்கம் வீரர்” என்று பெரியாரைப் போற்றினார். மூதறிஞர் ராஜாஜி, “தீரரைப் போற்றுகிறது தமிழ்நாடு” என்று எழுதினார்.
இதையெல்லாம்விட புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியது மிக முக்கியமானது. “இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற 1924ல் திருவிதாங்கூர் மாநிலத்தில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுதான் ‘மகத்’ போராட்டத்தை தொடங்கினார் அம்பேத்கர். ராமசாமி நாயக்கர் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். தன் சிந்தனையிலும், செயலிலும் காந்தியத்தை கொண்டிருந்தாலும், சமூக மாற்றமே இந்தியாவுக்கு முதன்மையானது என்று உறுதியாக நம்புகிறவர்” என்று 1928ம் ஆண்டு பாராட்டியவர் அம்பேத்கர்.
‘வைக்கம் போராட்டம்’ என்பது, கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி. அமராவதி கோயில் நுழைவு, பார்வதி கோயில் நுழைவு, நாசிக்கில் இருக்கும் காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றிற்கு புரட்சியாளர் அம்பேத்கர் முயற்சிகள் காரணம் என்றால், தமிழ்நாட்டில் சுசீந்திரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், மயிலாடுதுறை கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம்.
ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929ம் ஆண்டு அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழ்நாட்டின் பல கோயில்களுக்குள் சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் நுழைய முடிவு செய்தார்கள். இந்த நிலையில்தான், 1939ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, ‘கோயிலுக்குள் வருகிறவர்கள் அனைவரையும் அரசு பாதுகாக்கும்’ என்று உத்தரவாதம் பெறப்பட்டது. கேரள சமூகச் சீர்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் பல்ப்பு பத்மநாபன் போன்றவர்களும், தமிழ்நாட்டு சமூகச் சீர்திருத்தவாதிகளான பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோரும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.
தமிழ்நாட்டில் இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல்வழியிலும், பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உயர்ந்த சாதி- தாழ்ந்த சாதி, ஏழை – பணக்காரன், ஆண் – பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும்.
பெரியார், அம்பேத்கர், ஸ்ரீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம். தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம். அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்! எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்.கொண்ட கொள்கையில் வெல்வோம்! ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்!. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கோவி.செழியன், என்.கயல்விழி செல்வராஜ், கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், எம்பிக்கள் கே.பிரான்சிஸ் ஜார்ஜ், தொல்.திருமாவளவன், அந்தியூர் செல்வராஜ், எம்எல்ஏ சி.கே.ஆஷா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கேரள அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கோட்டயம் மாவட்ட கலெக்டர் ஜான் வி.சாமுவேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வைக்கம் என்பது சமூகநீதி போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும் appeared first on Dinakaran.