×

பாடி ஸ்க்ரப்பை அடிக்கடி பயன்படுத்தலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

நமது சருமத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்றி பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கு பாடி ஸ்க்ரப் பயன்படுத்தப்படுகிறது. இவை மென்மையாக இல்லாமல் கொர கொரப்பான தன்மை கொண்டிருக்கும். இது போன்ற ஸ்க்ரப்புகளை பயன்படுத்தி நமது சருமத்தை சுத்தப்படுத்தலாம். இது சருமத்தில் சரும செல்களின் வளர்ச்சியை தூண்டி சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு வழி வகுக்கிறது. மேலும் முகப்பருக்களை தடுக்க இது சிறந்த வழியாகும். இந்த பாடி ஸ்க்ரப் நமது சரும ஆரோக்கியத்திற்கு சிறந்ததா.. இதை அடிக்கடி பயன்படுத்தலாமா என்பதை தெரிந்து கொள்வோம்.

ஸ்க்ரப் பயன்படுத்தும்முறை

சருமத்தின் வகையைப் பொறுத்து சரியான ஸ்க்ரப் தேர்ந்தெடுக்க வேண்டும். தரமான மற்றும் அதிக ரசாயனங்கள் கலக்கப்படாத ஸ்க்ரப் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வறட்சியான உடல் சருமம் கொண்டவர்கள் கவனமாக ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும்.ஸ்க்ரப் பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் அழுக்குகள் இல்லாதவாறு முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். பின்னர் பயன்படுத்தக்கூடிய ஸ்க்ரப்பை தேவையான அளவு எடுத்து கொள்ளலாம்.

ஸ்க்ரப்பை நேரடியாக சருமத்தில் தேய்க்கக்கூடாது. முகத்தில் அல்லது சருமத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 30 விநாடிகளுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். பிறகு மிதமான வெந்நீரில் கழுவிக் கொள்ளவும். இதன்மூலம் சருமத்தில் இறந்தசெல்கள் நீங்கி பளபளவென்று பொலிவாக இருக்க செய்யும்.சில நேரங்களில் அதிகப்படியாக நாம் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துவதன் காரணமாக சருமத்தில் வறட்சி ஏற்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய ஸ்க்ரப்களில் செராமைடுகள், வைட்டமின் ஈ அல்லது ஹைலூரோனிக் அமிலம் போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

ஸ்க்ரப் செய்த பிறகு உடல் முழுவதும் மாய்சுரைசர் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தின் உணர்திறனை பொறுத்து இதனை பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்துவதால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படலாம். எனவே மேற்குறிப்பிட்டபடி சரியான தயாரிப்பை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். நிபுணர்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் உங்களுக்கு இது போன்று பயன்படுத்தும்போது சிறந்த தீர்வு கிடைத்தால் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்க்ரப் வகைகளில் சர்க்கரை மற்றும் கடல் உப்பு போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பெரிய துகள்களாக உள்ள ஸ்க்ரப் வகைகளை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது சருமத்தில் சிராய்ப்புகள், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஸ்கிரப்பை தேர்ந்தெடுக்கும் போது அதில் சாலிசிலிக் அமிலம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதுபோன்று கிளைக்காலிக் ஆசிட் இருக்கும் ஸ்க்ரப் உணர்திறன் மிக்க சருமம் உடையவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

வீட்டிலேயே ஸ்க்ரப் தயாரிக்கும் முறை

நாட்டு சர்க்கரை மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

நாட்டு சர்க்கரை – அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – கால் தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி

தயாரிப்பு முறை

தேங்காய் எண்ணெயுடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இதனுடன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும். இந்த கலவையை நன்கு கலந்து கொள்ளவும். தேவை எனில் தேங்காய் எண்ணெயை தேவைக்கேற்ப பயன்படுத்தி ஸ்க்ரப் பதத்தில் இதனை தயார் செய்து கொள்ளலாம். இந்த கலவையை இந்த ஸ்க்ரப் உங்களது சருமத்தில் வாரத்துக்கு இருமுறை பயன்படுத்தலாம். சருமத்துக்கு தேன் அற்புதங்களை செய்யும். சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்.

காபி பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள்

காபி பவுடர் – 1 தேவைகேற்ப
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
வெந்நீர் – 2 தேக்கரண்டி

தயாரிப்பு முறை

காபி பவுடருடன் தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் சிறிதளவு சூடு செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை சேர்த்து கலக்கவும். இந்த கலவை ஸ்க்ரப் பதத்தில் வரும் வரை தேவையான அளவு காபி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை நீங்கள் உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
எந்த ஒரு ஸ்க்ரப் பயன்படுத்துவதற்கு முன்பும் அதனால் ஒவ்வாமை ஏதும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பின்பு மற்ற இடங்களில் பயன்படுத்தலாம். ரெட்டினோல் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்றவற்றில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளை பயன்படுத்தும்போது சருமத்தில் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே சரும பராமரிப்பு நிபுணரிடம் கலந்தாலோசித்து இது போன்ற தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

தொகுப்பு: ரிஷி

The post பாடி ஸ்க்ரப்பை அடிக்கடி பயன்படுத்தலாமா? appeared first on Dinakaran.

Tags : kumkum doctor ,Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!