×

சாப்பாடு கொடுக்காமல் துரத்தினர் மகனுக்கு எழுதி கொடுத்த வீட்டின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்

*சப் கலெக்டரிடம் முதியவர் மனு

குமாரபுரம் : குலசேகரம் மலைவிளை தோட்டங்கரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (76). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர், மனைவி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர் அயக்கோடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறார். இவரது பெயரில் வீடு இருக்கும் 5 சென்ட் நிலம் மட்டும் தான் இருந்துள்ளது.

மனோகரனின் மகன்களில் ஒருவர் அரசு வேலையும், மற்றொருவர் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள். மனோகரன் தனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுக்க பணம் இல்லாமல் பல பேரிடம் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்தார். அதன் பிறகு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.

அப்போது, மனோகரன் தன் பெயரில் இருந்த 5 சென்ட் நிலத்தை இரண்டாக பிரித்து ஒரு பங்கை மூத்த மகனுக்கு கொடுத்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கி கடன்காரர்களுக்கு கொடுத்தார். இன்னொரு பங்கில் இவரும், இவரது இளைய மகனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில் தாங்கள் குடியிருக்கும் குடும்ப வீட்டை இடித்து மாற்றி கட்ட வேண்டும் அதற்கு ஊராட்சி மன்றத்திடம் அனுமதி பெறுவதற்காக குடும்ப பங்கை எனது பெயருக்கு மாற்றி எழுதி பட்டா எடுத்து தருமாறு இளைய மகன் மனோகரனிடம் கேட்டார்.

அவரும் சரி என்று இளைய மகனின் பெயருக்கு எழுதி கொடுத்தார். வீடு கட்டி ஒரு வருடம் முடிந்த பிறகு தந்தை மனோகரனுக்கு சரியான முறையில் சாப்பாடு கொடுக்காமல், வீட்டில் படுப்பதற்கு இடமும் கொடுக்காமல் மகனும், மருமகளும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர்.

எங்கே செல்வது என்று தெரியாமல் நிற்கெதியாக நின்றுள்ளார் மனோகரன். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர் உள்பட ஊர் பொதுமக்கள் சேர்ந்து இளைய மகனின் வீட்டு முன்பு தார்பாய் செட் அமைத்து அதில் ஒரு கட்டில் போட்டு கொடுத்துள்ளனர். தினமும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனோகரனுக்கு சாப்பாடு கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மனோகரன் பத்மநாபபுரம் உதவி கலெக்டரிடம் இது சம்மந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தான் இளைய மகனுக்கு எழுதி கொடுத்த வீட்டின் உரிமையை ரத்து செய்து அதை என் காலம் முடியும் வரை என் பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தார். எனவே சப்-கலெக்டர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post சாப்பாடு கொடுக்காமல் துரத்தினர் மகனுக்கு எழுதி கொடுத்த வீட்டின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Manokaran ,Kulasekaram Malaiavila Dhotangara ,Manu Kumarapuram ,Aikoda ,Dinakaran ,
× RELATED சங்கல்ப யாகம் ஒத்தி வைப்பு