பந்தலூர் : பந்தலூர் அருகே அய்யன்கொல்லி தட்டாம்பாறை பகுதியில் வீட்டை உடைத்து புகுந்த காட்டு யானைகளிடம் இருந்து தப்பிக்க கூரை வழியாக தொழிலாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அய்யன்கொல்லி தட்டாம்பாறை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தட்டாம்பாறையை ஒட்டியுள்ள கருத்தாடு மேட்டில் கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் தனித்தனியாக பிரிந்து அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தட்டாம்பாறை குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகள் கூலித்தொழிலாளி கிருஷ்ணசாமி வீட்டின் கதவை உடைத்தது. இதில், குட்டி யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது.
வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணசாமி, யானையிடம் இருந்து தப்பிக்க சுவற்றில் ஏறி வீட்டின் கூரையை உடைத்து பின்பக்கமாக குதித்து தப்பியுள்ளார். அப்போது, கீழே விழுந்ததில் கிருஷ்ணசாமி காயம் அடைந்தார். இதையடுத்து பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, யானைகள் அருகே உள்ள சின்னவன் என்பவரின் வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,“கருத்தாடு மேட்டில் முகாமிட்டு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post பந்தலூர் அருகே பரபரப்பு குட்டி யானை வீட்டை உடைத்து புகுந்ததால் தொழிலாளி கூரை வழியாக தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.