- பொத்தட்டுர்பேட்டை
- திருத்தணி
- பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- பெண்கள் உயர்நிலைப்பள்ளி
- போடத்தூர்பேட்டை
திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, ஏகாம்பரகுப்பம், சத்திரவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு பேருந்துகள் மற்றும் சைக்கிள்களில் வந்து படிக்கின்றனர்.
இந்தநிலையில் சமீபகாலமாக பேருந்துகளில் பயணம் செய்யும் கிராமப்புற மாணவர்கள் இடையில் தகராறு அதிகரித்து வருகிறது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு சில மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறும் பேருந்து மேற்கூரை, பக்கவாட்டு கம்பிகளை பிடித்துக்கொண்டும் பயணம் செய்வதால் பயணிகள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துனரும் அச்சத்துடன் பேருந்தை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நெடுங்கல், கீச்சலம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோஷ்டிகளாக பிரிந்து வாய்த் தகராறில் ஈடுபட்டு திடீரென்று தாக்கிக் கொண்டனர். இதில் மாணவர்களின் சட்டை மற்றும் பேண்ட் கிழிந்தது. தகவல் அறிந்து பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பொது இடங்களில் அநாகரீகமாக செயல்பட்டு மோதலில் ஈடுபட்டாலோ, பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
The post பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு: போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர் appeared first on Dinakaran.