×

மம்தாவை தலைவராக்கும் விவகாரம் இந்தியா கூட்டணி கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: காங். எம்பிக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலை தொடர்ந்து அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை ேதால்வியால் இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சூழலில் இந்தியா கூட்டணிக்கு தலைமை பொறுப்பை ஏற்க தயார் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். அவரது கருத்தை தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் பிரிவு தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் மம்தாவை தலைவராக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் ராகுல்காந்திக்கு எதிராக அவர்கள் திரண்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மம்தாவை தலைவராக்கும் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று நடந்த மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:

இந்தியா கூட்டணியின் தலைமை பொறுப்பு குறித்து பேசி வரும் கூட்டணி கட்சித்தலைவர்களின் கருத்துகளுக்கு எம்பிக்கள் யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம். ஏனெனில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. கூட்டணியில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்டது. எனவே அதைப்பற்றி யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டாம்.

அதே சமயம் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக, குறிப்பாக காங்கிரஸ் தலைவர் பங்கேற்கும் போது, ​​கட்சியின் போராட்டத்தில் அனைத்து எம்பிக்களும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் ஒன்றிய அரசை பதற்றமடையச் செய்துள்ளன. எனவே காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சி குரல் கேட்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.

The post மம்தாவை தலைவராக்கும் விவகாரம் இந்தியா கூட்டணி கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: காங். எம்பிக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : India ,Mamata ,Congress ,Rahul Gandhi ,New Delhi ,India Alliance ,Legislative Assembly ,Ariana ,Maharashtra ,Lok Sabha elections ,West Bengal ,Chief Minister ,Trinamool ,Mamata Banerjee ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க...