புவனேஷ்வர்: டெல்லியை சேர்ந்த 9 வயதே ஆன சிறுவன், செஸ் கிராண்ட் மாஸ்டரை வென்று குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டரை வென்ற இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெல்லியில் கேஐஐடி சர்வதேச செஸ் ஓபன் டோர்னமென்ட் நடந்து வருகிறது. கடைசி சுற்றுக்கு முந்தைய போட்டியாக நேற்று முன்தினம் நடந்த ஒரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரஸெட் ஜியாடினோவுடன் (66), டெல்லியை சேர்ந்த இளம் வீரர் ஆரித் கபில் மோதினார்.
நீண்ட நேரம் நீடித்த இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய ஆரித், 63 நகர்த்தலுக்கு பின் வெற்றி வாகை சூடினார். கிராண்ட் மாஸ்டரை வென்ற ஆரித் 9 ஆண்டுகள், 2 மாதம், 18 நாட்களே ஆன சிறுவன் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வெற்றி மூலம், கிராண்ட் மாஸ்டரை மிக குறைந்த வயதில் வென்ற இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆரித், அடுத்ததாக இந்த மாத இறுதியில் துர்காபூரில் நடக்கவுள்ள 13 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மோதவுள்ளார்.
முன்னதாக, இந்தாண்டு துவக்கத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு போட்டியில் போலந்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜேசக் ஸ்துாபாவை, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் அஸ்வத் கவுசிக் வென்றார். அப்போது அவர் வயது எட்டரை. உலகளவில் செஸ் கிராண்ட் மாஸ்டரை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக அஸ்வத் நீடிக்கிறார்.
The post செஸ் கிராண்ட் மாஸ்டரிடம் வெற்றி ஒன்பது வயசு… காரியம் பெரிசு! டெல்லி சிறுவன் அசத்தல் சாதனை appeared first on Dinakaran.