×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

நேற்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ச்சியாக அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுனால் அடுத்த 4 நாட்களில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கடலூர் மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை(11ம் தேதி) கடலூர், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

12ம் தேதியில் திருச்சி, தஞ்சாவூர் புதுக்கோட்ைட, சிவகங்கை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டனம் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 13ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

குமரிக் கடல் மன்னார் வளைகுடா தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று 13ம் தேதி வரை வீசும். அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி வரை டிசம்பர் 10ம ்தேதி வரையில் 45 செமீ பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 40 செமீ பெய்ய வேண்டும். அதிகமாக 14 சதவீதம் பெய்துள்ளது.

தற்போது பெய்துள்ள மழையில் 22 மாவட்டங்களில் இயல்பாகவும் 15 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் 11 மாவட்டங்களில் இயல்பை குறைவாகவும் பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல நகரும் தன்மை கொண்டுள்ளது. இதனால் அனேக இடங்களில் மழை பெய்யும். கிழக்கில் இருந்து மேற்காக நகர்ந்து செல்லும் போது படிப்படியாக மழை பெய்யும் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,South East Bay of Bengal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் மழை தொடரும்: இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது