×

நாடாளுமன்றத்திற்கு மோடி-அதானி ஜோல்னா பையுடன் வந்த எம்பிக்கள்: 2வது நாளாக வித்தியாச போராட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் மோடி-அதானி படங்களுடன் கூடிய ஜோல்னா பையை தோளில் அணிந்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியதில் இருந்து, தொழிலதிபர் அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் இரு அவைகளும் தொடர்ச்சியாக முடங்கி வருகின்றன.

இதனை கண்டித்து, கடந்த 3ம் தேதி முதல் நாடாளுமன்ற வளாகத்தில் மகர் துவார் நுழைவாயில் படிக்கட்டுகள் முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மோடி, அதானி வேடமிட்டு எம்பிக்கள் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். அப்போது, மோடி, அதானி முகமூடி அணிந்த எம்பிக்களிடம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேட்டி எடுத்து விறுவிறுப்பாக்கினார்.

இந்நிலையில், வித்தியாசமான போராட்டத்தின் 2வது நாளாக மோடி-அதானி கட்டிப்பிடித்தபடி இருக்கும் கார்ட்டூன் படம் அச்சிடப்பட்ட கருப்பு நிற ஜோல்னா பை அணிந்தபடி எம்பிக்கள் மகர் துவார் படிக்கட்டுகள் முன்பாக நின்றபடி போராட்டம் நடத்தினர். அந்த பையின் பின்புறம் ‘மோடியும் அதானியும் சகோதரர்கள்’ என எழுதப்பட்டிருந்தது. இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ், திமுக, ஜேஎம்எம், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். முன்னதாக, ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

The post நாடாளுமன்றத்திற்கு மோடி-அதானி ஜோல்னா பையுடன் வந்த எம்பிக்கள்: 2வது நாளாக வித்தியாச போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Modi ,New Delhi ,Jolna ,Modi- ,Adani ,
× RELATED அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம்...