×

திருகார்த்திகை தீப வழிபாடால் அகல் விளக்கு விற்பனை தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோயில்களில் 13ம் தேதி திருகார்த்திகையையொட்டி தீப வழிபாடு நடக்கிறது. இதனால் அகல் விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் திருகார்த்திகை தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் விரதமிருந்து கோயில் மற்றும் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டில் கார்த்திகை மாதம் முதல் தேதி கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி துவங்கியது.

இதையொட்டி, ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிந்து, மகரஜோதி காண சபரிமலை செல்வதற்காக விரதத்தை துவங்கி கடைபிடிக்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதில் திருகார்த்திகை தீப வழிபாடு வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி பொள்ளாச்சியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.

மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில், பிளேக் மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், சுப்பிரமணிய சாமி கோயில், கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற உள்ளது.

மேலும் பல கோயில்களில் நடக்கும் திருகார்த்திகை தீப விழாவையொட்டி சொக்கப்பானையும் கொழுத்தப்படுகிறது. திருகார்த்திகை நெருங்குவதால், களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ஆங்காங்கே விற்பனைக்கு அதிகளவில் வந்துள்ளது. சிறியது முதல் பெரிய அளவிலான விளக்குகள் வரையில், பீங்கான், பித்தளை, வெண்கலம் போன்றவைகளில் விளக்குகள் இருந்தாலும் களி மண்ணால் செய்த விளக்குக்கு நல்ல கிராக்கி உள்ளது.

நகரில் திருநீலர் கண்டர் வீதி, கடை வீதி, தெப்பக்குளம் வீதி, காந்தி மார்க்கெட் பகுதி, வெங்கடேசா காலனி, திருவிக மார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனைக்காக அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. அதனை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து பலரும் வாங்கி செல்கின்றனர். ஒரு விளக்கு ரூ.1.50 முதல் சொக்கபானை வடிவில் பெரிய அகல் விளக்கு ரூ.300 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post திருகார்த்திகை தீப வழிபாடால் அகல் விளக்கு விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thirukarthikai ,Pollachi ,Agal Lamp ,Thirukarthikai Deepa Festival ,Karthikai ,Thirukarthikai Deepa ,Akal ,
× RELATED பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண்...