*2 பேரிடம் ரூ.87,000 திருட்டு
சின்னசேலம் : சின்ன சேலத்தில் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்ற 2 பேரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ.87,000 பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே பூண்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38).
விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5ம் தேதி மதியம் 2 மணியளவில் சின்னசேலத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது தனக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்ற நபரிடம் பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
அந்த நபர் சக்திவேலின் கார்டை ஏடிஎம்மில் போட்டு பார்த்து விட்டு, உங்களது கார்டு பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று கூறி விட்டு, தனது ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், சக்திவேல் வேறொரு ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுக்க பார்த்தபோது, ரகசிய குறியீட்டு எண் தவறு என காட்டியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சக்திவேலின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50,000 டெபிட் செய்யப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான சக்திவேல், சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று விசாரித்தபோது, அவரது ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு, அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சக்திவேல் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா தொடாவூர் கிராமத்தை சேர்ந்த சேகர்(54) என்பவர் நேற்றுமுன்தினம் சின்னசேலத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அங்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் கார்டை கொடுத்துள்ளார். அவர் கார்டை மாற்றி போட்டு பணம் வரவில்லை என்று கூறி சென்றுவிட்டார். அதன்பிறகு கார்டை மாற்றி எடுத்து சென்ற நபர் சேகர் கணக்கில் இருந்து ரூ.37,000 பணத்தை எடுத்துள்ளார். இதையடுத்து சேகர் சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் 2தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த ஏடிஎம்மில் இருந்த கேமிரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் நேற்று மதியம் சந்தேகத்தின் பேரில் ஏடிஎம் அருகில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கருப்பையா(42) என்பதும், 2 பேரை ஏமாற்றி எடிஎமில் இருந்து பணம் எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கருப்பையாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்ததுடன், அவரிடமிருந்து ரூ.65,000 பணம் பறிமுதல் செய்தனர்.
The post சின்னசேலத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பண மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.