டெல்லி: ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது. இளங்கலை, முதுகலை போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றவேண்டிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தலாம். உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்கல்வி நிறுவனவே முடிவு செய்யலாம்.
உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு, இன்டென்ஷிப் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்த பாடதிட்டத்துடன் இணைத்துக்கொள்ளலாம். மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தவும், தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைத்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல், கணிதம், வணிகவியல் என எந்த பாடப்பிரிவை தேர்வு செய்திருந்தாலும் விரும்பிய பட்டப்படிப்பில் சேரலாம் இதற்காக தேசிய அல்லது பல்கலை கழக அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் உயர்கல்வி நிறுவனங்களில் போதிய கல்வி அடிப்படை வசதி இருந்தால் இளங்கலை முதுகலை படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை நேரடியாக 2 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் இளங்கலையில் 2 பட்டப்படிப்புகளையும் முதுகலையில் 2 படிப்புகளையும் படிக்கலாம். மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு தேவையை தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் உயர்கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யலாம். இளங்கலை பட்டபடிப்பின் காலம் 3 அல்லது 4 ஆண்டுகளாகவும் ,முதுகலை படிப்பின் காலம் 1 அல்லது 2 ஆண்டுகளாக இருக்கும். 4 ஆண்டு கால இளங்கலை படிப்பை முடிப்பவர்கள் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரலாம். இந்த திட்டத்தில் நிறைகள் பல இருந்தாலும் நுழைவு தேர்வு என்பது மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும். கல்வி திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவரும்போது அனைத்து மாநிலங்களின் கருத்தை கேட்டறிந்து நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post இளங்கலை, முதுகலையில் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம்: யு.ஜி.சியின் புதிய வரைவு வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு appeared first on Dinakaran.