ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம்-காரணி இடையே ₹20 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்பகுதியை சுற்றியுள்ள 10 கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு இங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாத இறுதியில் பெஞ்சல் புயல் காரணமாக மழை கனமழை பெய்தது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக, பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம்-காரணி கிராமங்களுக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உடைந்தது.
இதனால், ஆற்றில் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில் காவல் துறையினர் இந்த தரைப்பாலத்தில் யாரும் செல்லாதபடி தரைப்பாலத்திற்கு முன் முள் வேலிகளை தடுப்புகளாக அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். மேலும், பொதுமக்கள் பாலத்தை கடக்காதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தரைப்பாலம் பகுதியில் தண்ணீர் வடிந்ததால் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என 10 கிராமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரியபாளையம் அருகே சேதமடைந்த தற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.