×

திருப்போரூர் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களை குறிவைத்து மின் மோட்டாரை திருடும் கும்பல்: விவசாயிகள் வேதனை

திருப்போரூர், டிச.10: திருப்போரூர், தண்டலம், செம்பாக்கம், இள்ளலூர், காயார், ஆலத்தூர், வெங்களேரி உள்ளிட்ட இடங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலான நிலங்கள் ஏரிப்பாசனத்தை நம்பி இருந்தாலும், கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் மோட்டார் மூலம் நீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் நேரத்தில் மட்டும் மின்சாரத்தை இயக்கி நீர் இறைத்துவிட்டு மற்ற நேரங்களில் தங்களது மற்ற வேலைகளை கவனிக்க விவசாயிகள் சென்று விடுவர். தற்போது விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை இருப்பதால், நிலத்தின் உரிமையாளர்களோ அல்லது குத்தகைதாரர்களோ நேரடியாக பயிர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களை குறி வைத்து ஒரு கும்பல் இரவு நேரங்களில் பம்பு செட்டுகளில் உள்ள மின் மோட்டார்களை கழற்றி அவற்றில் உள்ள செம்பு கம்பிகளை மட்டும் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்டோவில் வரும் இந்த கும்பல் ஆளில்லாத விவசாய நிலங்களை குறிவைத்து அங்குள்ள பம்புசெட்டுகளுக்குச் சென்று 5 எச்.பி., 3 எச்.பி., 10 எச்.பி. மின் மோட்டார்களை கழற்றி அவற்றில் இருக்கும் விலை உயர்ந்த செப்பு கம்பிகளை மட்டும் திருடிக்கொண்டு மின் மோட்டாரின் மற்ற பாகங்களை அங்கேயே போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இதில் தண்டலம் கிராமத்தில் மட்டும் கோவிந்தராஜ், தெய்வசிகாமணி, வேதகிரி, மணி, பொன்னுரங்கம், செங்கேணி, சிவராஜ் ஆகியோரின் விவசாய நிலங்களில் இருந்து 7 மின் மோட்டார்களின் செம்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இதுகுறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், இரவு நேரங்களில் மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பலை தேடி வருகின்றனர். இதுகுறித்து, தண்டலம் ஏரிப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைக்கு போலீசார் நள்ளிரவு ரோந்து அல்லது தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தீர்வு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

The post திருப்போரூர் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களை குறிவைத்து மின் மோட்டாரை திருடும் கும்பல்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tiruporur ,Thandalam ,Sembakkam ,Illalur ,Kayar ,Alatur ,Venmageri ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை