- பள்ளி கல்வித் துறை
- எம். வேலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பள்ளி கல்வித் துறை
- மணி.
- கல்வித்துறை
- செல்வி
வேலூர்: பள்ளி விழா கொண்டாட்டங்களில் கண்பார்வைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலான மெர்குரி விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு கல்வி இணைசெயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற விழாக்கள், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் போன்றவை கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் கலை, பண்பாடு, பாரம்பரியம், மரபுசார் விழாக்கள் மற்றும் பண்டிகைகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விழாக்கள் பள்ளி வேலை நேரத்தில் நடைபெறக்கூடாது. அதே சமயம், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விழா நேரத்தை முடிவு செய்யவேண்டும். இதுகுறித்து முன்கூட்டியே மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். பள்ளி விழா ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து மதங்களை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் இடம்பெற வேண்டும். அனைத்து விழாக்களும் பள்ளித் தலைமையாசிரியரின் முன்னிலையிலேயே நடைபெற வேண்டும். விழாவிற்குரிய மாண்போடு விழா தொடர்பான செயல்பாடுகள் இருப்பதை உறுதிபடுத்துவது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
அனைத்து பள்ளி நிகழ்வுகளுக்கும் நிகழ்ச்சி நிரலை தயாரித்து, அதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட பிஇஓ, டிஇஓ மற்றும் சிஇஓக்களிடம் பெற வேண்டும். விழா மேடையமைப்பு, மாணவர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் அமர வைக்கப்படும் இடம், விழா நேரம் ஆகியவற்றினை மிகவும் கவனத்துடன் திட்டமிடவேண்டும். அசாதாரண சூழலில் அனைவரும் எவ்வழியில் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விழா நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒளிரும் மின் விளக்குகள் மாணவர்களின் இயல்பான கண்பார்வைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையக்கூடாது. மெர்குரி விளக்குகள் பயன்படுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகள், ஒலி மாசு ஏற்படா வண்ணம் பயன்படுத்தப்பட வேண்டும்.
கலை நிகழ்ச்சிகளை பொறுத்தவரை, உள்ளூர் கலைகள், கலாச்சாரம், பாரம்பரிய நடனம், நாடகம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமுடைய மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும் திட்டமிட வேண்டும். பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கக் கூடிய புகழ்பெற்ற அறிஞர்கள், அறிவியல் வல்லுநர்கள். ஓய்வு பெற்ற மூத்த இந்தியக் குடிமைப் பணி அலுவலர்கள், கல்வியாளர்கள், சமூகத்தில் நன்மதிப்பை பெற்றவர்களின் பட்டியல், மாநில, மாவட்ட அளவில் பராமரிக்கப்படும். இவர்களை அழைத்து விழாக்கள் நடத்த எவ்வித முன்அனுமதியும் பெற வேண்டியதில்லை. இதர சிறப்பு விழாவில் பங்கேற்கும் நபர்கள் குறித்து முன் அனுமதி பெறப்பட வேண்டும். பள்ளி விழா நிகழ்வு நடைபெறுவதற்கு குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு முன்னரே. முன் அனுமதி கோரி பள்ளித் தலைமை ஆசிரியர் உரிய அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மாணவர்களின் கண்பார்வைக்கு ஊறு ஏற்படக்கூடாது; பள்ளிவிழாக்களில் மெர்குரி விளக்குகளுக்கு தடை.! ஹெச்.எம்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.