×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

முதல் உலக அழகிப் போட்டியாளர்

சமீபத்தில் மெக்சிகோவில் 73-வது உலக அழகிப் போட்டி நடந்து முடிந்தது. இதில் 125 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா என்ற இளம் பெண் உலக அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட லோஜினா சலா என்ற பெண் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் திருப்பியிருக்கிறார். வெண்புள்ளி எனும் விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுபது வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட
விட்டிலிகோவால் பாதிக்கப்பட்ட முதல் பெண்ணும் லோஜினா தான். மட்டுமல்ல, 125 பேர் பங்குபெற்ற உலக அழகிப் போட்டியில் டாப் 30 இடங்களுக்குள் வந்திருக்கிறார். எகிப்து சார்பாக உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட லோஜினா, தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

பட்டையைக் கிளப்பும் திருமணச் சந்தை

இந்தியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 48 லட்ச திருமண நிகழ்வுகள் நடக்கும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு கணித்திருக்கிறது. இத்திருமணங்கள் மூலமாக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வணிக வாய்ப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக டெல்லியில் மட்டுமே 4.5 லட்சம் திருமணங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமணங்கள் மூலம் நிகழும் வணிகப் பரிவர்த்தனைகள், உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பங்களிப்பு செய்யும் என்கின்றனர். இந்தக் கல்யாணத் திருவிழா கடந்த நவம்பர், 12-ம் தேதியிலிருந்து சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே திருமண வியாபாரத்துக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். சொந்த ஊரை விட்டு, புகழ்பெற்ற ஊரோ அல்லது சுற்றுலா தலங்களுக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளும், ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ என்கிற புதிய வகை திருமண முறையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இளம் சதுரங்க வீரர்

இந்தியாவின் இளம் சதுரங்க ஆட்டக்காரர்களைக் கண்டு, மற்ற நாடுகளின் அனுபவம் வாய்ந்த வீரர்களே பயந்து போயிருக்கின்றனர் என்பது உண்மை. நம்முடைய இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடும்போது, அவரது ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார் உலக சாம்பியனான கார்ல்சன். மட்டுமல்ல, ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் அறிந்த ஒரே சதுரங்க ஆட்டக்காரராக விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இருந்தார்.

அவரைத் தவிர, மற்ற இந்தியச் சதுரங்க வீரர்களைப் பற்றி பொதுவெளியில் பெரிதாக தெரியாது. ஆனால், பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைசாலி போன்ற இளம் சதுரங்க வீரர்கள் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலம். இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த அனிஷ் சர்கார். சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த உலகின் மிக இளம் வீரர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார், அனிஷ். அவரது வயது 3. அதாவது, தரவரிசைப் பட்டியலில் அனிஷ் இடம்பிடிக்கும்போது அனிஷ் பிறந்து 3 வருடங்கள், 8 மாதங்கள், 19 நாட்கள் ஆகியிருந்தது.

ஓய்வு பெற்றார் களிமண் ராஜா

சமீபத்தில் டென்னிஸ் விளையாட்டில் ஓய்வு பெற்றிருக்கிறார் ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால். களிமண் தரையில் அசைக்க முடியாத ஒரு வீரராக இருந்தார் நடால். அவரை களிமண் ராஜா என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். இரு ஆஸ்திரேலியன் ஓப்பன், 14 ஃபிரெஞ்ச் ஓப்பன், 2 விம்பிள்டன், 4 யுஎஸ் ஓப்பன் என 22 தனி நபர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். இதுபோக ஒலிம்பிக்கில் ஒரு முறை தனி நபர் பிரிவில் தங்கமும், ஒரு முறை இரட்டையர் பிரிவில் தங்கமும் வென்றிருக்கிறார். ஆக மொத்தம் தனி நபர் பிரிவில் 92 பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 11 பட்டங்களையும் வென்றிருக்கிறார். தவிர, உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக 209 வாரங்களுக்கு இருந்திருக்கிறார் நடால்.

மலையேற்ற வீராங்கனை

இன்று உலகம் முழுவதும் சுமார் 12 கோடிப் பேர் மலையேற்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். மலையேற்றத்துக்கான ஆடைகள், காலணிகள், உபகரணங்கள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பைக் கொண்ட ஒரு துறை, மலையேற்றம். கோடிக்கணக்கான மலையேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்தியில் தனித்து தெரிகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செரன் பிரைஸ். இளம் மலையேற்ற வீராங்கனையாக வலம் வரும் செரனின் வயது 6. சமீபத்தில் மொரோக்காவில் உள்ள அட்லஸ் மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் டப்கல் என்ற மலையின் மீது ஏறியிருக்கிறார் செரன். வட ஆப்பிரிக்காவில் உள்ள உயரமான மலை இது. இதன் உயரம், 13,600 அடி. டப்கல் மலையில் ஏறிய இளம் மலையேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிட்டார் செரன்.

தொகுப்பு: த.சக்திவேல்

The post நியூஸ் பைட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Bites ,Saffron Girl ,73rd World Beauty Contest ,Mexico ,Victoria ,Denmark ,
× RELATED 16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!