×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும்.

ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும். தமிழ்நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இந்தத் திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,K. ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,K. Stalin ,
× RELATED சிறுபான்மை மக்களின் இன்னல்களை...