காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உழவர் சந்தையில், சாம்பல் பூசணிக்காயை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் காஞ்சிபுரம் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் விற்பனை கூடம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தை ஒருமுறை பயன்படுத்த நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் அல்லது மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை கூடத்தில் பலா, வாழை, தேங்காய், தர்பூசணி, சாம்பல் பூசணி என பல்வேறு காய்கறிகள் சிறப்பாக விற்பனை செய்யப்படுகிறது.
அமாவாசை, பஞ்சமி, முகூர்த்த தினங்கள் மற்றும் சபரிமலை மண்டல பூஜை என தொடர்ந்து விழா நாட்கள் வருவதால் இந்த விற்பனை கூடத்தில் சுமார் 15 டன்னுக்கு மேலாக சாம்பல் பூசணி விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக பயிர் செய்யும் விவசாயிகள் அல்லது அறுவடை செய்யும் விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை மொத்தமாக விற்பனை செய்யவும் மழை மற்றும் வெயிலில் இருந்து விளைபொருளை பாதுகாக்கவும் இந்த பரிவர்த்தனை கூடத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ஜீவராணி தெரிவித்துள்ளார்.
The post காஞ்சிபுரம் உழவர் சந்தையில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் பூசணி appeared first on Dinakaran.