×

செய்யாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக நிரம்பி வழியும் உத்திரமேரூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

உத்திரமேரூர்: கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, உத்திரமேரூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது பல்லவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட உத்திரமேரூர் ஏரி. வைரமேகன் தடாகம் என்றழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரியானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி சுமார் 4000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 20 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில் 13 மதகுகள் உள்ளன. ஏரி முழு கொள்ளளவு அடைந்தால் உபரிநீர் வெளியேர 3 கலங்கல் உள்ளன. ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் 18க்கும் மேற்பட்ட கிராங்களில் சுமார் 5436 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஏரி முழு கொள்ளளவை எட்டினால் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். விவசாயம் மட்டுமின்றி இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கும் மிக முக்கிய நீராதரமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செய்யாற்றிலிருந்து அனுமந்தண்டலம் கிராமத்தில் உள்ள தடுப்பணை வழியாக உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தற்போது உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. இதனால், ஏரியினை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post செய்யாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக நிரம்பி வழியும் உத்திரமேரூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Uttaramerur lake ,Uttaramerur ,Kanchipuram ,Pallava ,Vairamegan Lake… ,Uttara Merur Lake ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...