×

கவனம்… கர்ப்பப்பை இறக்கம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிகிச்சை என்ன?

இன்றைய காலச் சூழலாலும், மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களாலும், பெண்களை பாதிக்கும் பலவித நோய்களும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கர்ப்பப்பை இறக்கமும் ஒன்று. கர்ப்பப்பை இறக்கத்திற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் கீதா ஹரிப்ரியா.

கர்ப்பப்பை இறக்கம் என்றால் என்ன?

கர்ப்பப்பையானது இடுப்புப் பகுதிக்குள் தசைகள், திசுக்கள் மற்றும் தசைநார்களுடன் இணைந்து வெளியில் தெரியாமல் இருப்பதாகும். இது பொதுவாக 4-5 செ.மீ வரை இருக்கும். சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் தளர்வு ஏற்பட்டு, நாளடைவில் கர்ப்பப்பை இருக்கும் இடத்திலிருந்து சற்று கீழே இறங்கிவிடும் நிலைதான் கர்ப்பப்பை இறக்கம் என்றும் அடி இறக்கம் என்று சொல்கிறோம்.

இதில் மூன்று நிலைகள் இருக்கின்றன. முதல் நிலையில் லேசான இறக்கம் மட்டுமே இருக்கும். இதை பெரும்பாலான பெண்கள் உணர்வதே இல்லை. இரண்டாவது நிலை என்பது லேசான நிலைக்கு சற்று கீழே இறங்கியிருப்பது. மூன்றாவது நிலை என்பது முழுவதுமாக வெளியே வருவது. இந்த நிலை ஏற்படும்போது, சிறுநீர் பையும், மலப்பையும் அழுத்தம் ஏற்பட்டு, இழுக்கப்பட்டு அவைகளும் சேர்ந்து இறங்கிவிடும்.

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணம்..

சில பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்காது. இருந்தாலும், கர்ப்பப்பை பலவீனம் அடைந்து போதிய சப்போர்ட் கிடைக்காமல் கீழே இறங்கி விடும். சில பெண்களுக்கு பிரசவத்தின்போது அதிக சிரமம் ஏற்பட்டு நீண்ட நேரம் வலியுடன் போராடி கஷ்டக் குழந்தையை பிரசவித்திருப்பார்கள். சிலருக்கு குழந்தை அதிக எடையில் இருந்து அதனால் பிரசவத்தின்போது மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள்.

சிலருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட சுகபிரசவங்கள் நடந்திருப்பது போன்ற காரணங்களால் கர்ப்பப் பை இறக்கம் நிகழலாம்.சிலருக்கு மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன் சுரப்பு குறைவதனால், கர்ப்பப்பையை சுற்றியிருக்கும் தசைகள் பலவீனம் அடைந்து அதனால் அடி இறங்கலாம். சில பெண்களுக்கு பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுத்திருப்பார்கள். அவர்களுக்கும் பிற்காலத்தில் அடி இறங்க வாய்ப்பு உண்டு. சிலர் பிரசவம் முடிந்து போதிய ஓய்வில்லாமல், பளு தூக்குவது போன்ற கடினமான வேலைகளை செய்திருப்பார்கள். இதில் ஏதேனும் ஒருநிலையில்தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது.

கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகள்…

கர்ப்பப்பை இறங்கும் போது, முதுகில் வலி, இடுப்பு வலி, வயிற்று வலி, கர்ப்பப்பை வாய் புண் ஏற்பட்டு தொற்றுகள் ஏற்படுவது போன்றவை ஏற்படும். கர்ப்பப்பை வெளியில் இருப்பதால் நடக்கும்போது, தொடைகளுக்கிடையே உரசி, சிரமத்தைக் கொடுக்கும். சிலருக்கு கர்ப்பப் பை வெளியில் வருவதால், ரத்தப் போக்கும் ஏற்படலாம்.

கர்ப்பப்பை இறக்கத்தினால், சிறுநீர் பையும், மலப்பையும் இழுக்கப்பட்டு சேர்ந்து கீழே இறங்குவதால், அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது. சிறுநீரை அடக்க முடியாத நிலை. சிலருக்கு இருமினால், தும்மினால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை இருக்கும். சிலருக்கும் சிறுநீர் பையில் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல், தேங்கி இருக்கும். அதுபோன்று மலச்சிக்கல் ஏற்பட்டு, அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை அறிகுறிகளாகும்.இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், அன்றாட வாழ்க்கையை சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும். சிலருக்கு சிறுநீர் தேங்கி இருப்பதால், கிட்னியும் பாதிக்கப்படலாம்.

சிகிச்சை முறைகள்

லேசான நிலையில் இருப்பவர்களுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். இது பெல்விக் ப்ளோர் பயிற்சிகள் என்று கூறப்படுகிறது. இந்த பயிற்சிகள் தசைகளை பலப்படுத்தும். இதன் கூடவே ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்வது, அதிக உடல் உழைப்பு கொடுக்காமல் இருப்பது போன்றவை மேற்கொள்ளும்போது விரைவில் குணமாகும். இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு, மருந்து, மாத்திரைகள் எதுவும் கிடையாது. சிலவகையான உடற்பயிற்சிகள் மற்றும் அறுவைசிகிச்சை அளிக்கப்படும்.

முன்றாம் நிலையில், அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்கள் மற்றும் அறுவைசிகிச்சையில் விருப்பமில்லாதவர்களுக்கு ஒருவித ரிங் பயன்படுத்தி, கர்ப்பையை மேலே தள்ளி உள்ளே வைத்துவிடுவோம். ஆனால், இந்த சிகிச்சை முறையில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதனால், இதனை பெரும்பாலும் பரிந்துரைப்பதில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இந்த சிகிச்சை முறையை பயன்படுத்துவோம்.

வயது முதிந்தவர்களாக இருந்தால், பெரும்பாலும் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவோம். அதுவே, வயது குறைந்தவர்களாக இருந்து, குழந்தை வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, கர்ப்பப்பையை மேலே தள்ளி வைத்து , தையல் இட்டுவிடுவோம். இவைதான் தற்போதைய சிகிச்சை முறைகள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கவனம்… கர்ப்பப்பை இறக்கம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்!