தேனி : தேனி மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கருத்தரங்கிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். இக்கருத்தரங்கில், ஆட்சி மொழி சட்ட வரலாறு, ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள், ஆட்சி மொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி. மொழிப்பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் முதலிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கருத்தரங்கில் பேசும்போது, தேனி மாவட்டத்தில் பெயர்பலகைகள் தமிழில் அமைப்பதற்கு தமிழ்வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் 76 சதவீதம் பதிவேடுகள் மற்றும் கோப்புகள் தமிழ்மொழியில் கையாளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்தி தங்கள் அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தினை செயல்படுத்துமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழில் சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதும் அரசு பணியாளர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 4 பேருக்கும், இரண்டாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 பேருக்கும், மூன்றாம் பரிசாக தலா ரூ.1 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் என மொத்தம் 10 பேருக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 2022ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்திய மாவட்ட, நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு சிறந்த அலுவலகத்திற்கான பரிசு மற்றும் கேடயத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இக்கருத்தரங்கில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோ, வையைத் தமிழ்ச் சங்கம் நிறுவனர் புலவர் இளங்குமரன், தமிழ்த்துறை தலைவர் பால்பாண்டி, தேனி தமிழ்ச் சங்கத் தலைவர் பொன்முடி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அனைத்துத் துறை அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம் appeared first on Dinakaran.