- காஞ்சிபுரம்
- பட்டா
- மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம்
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
- வல்லம் கிராமம்
- பெரும்புதூர் தாலுகா
- காஞ்சிபுரம் மாவட்டம்
- மாவட்ட நுகர்வோர் குறை ஆணையம்
- தின மலர்
காஞ்சிபுரம்: பட்டாவை சரி செய்து வழங்கா கால தாமதம் ஏற்படுத்தியதால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு, ரூ5 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், தனது குடும்பத்திற்கு சொந்தமான 40 சென்ட் நிலம் தொடர்பான பட்டா ஆவணங்களில் பிழை ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளார். வல்லம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த தங்கள் நிலத்தின் பட்டாவை புதுப்பித்தல் பதிவேடு திட்டத்தின் கீழ் பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கு கூடுதலாக தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அதனை சரி செய்ய வருவாய் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பத்த நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
நிலத்தின் பட்டாவை சரி செய்ய விண்ணப்பித்த நிலையில் வருவாய்த்துறையினர் அவரது தந்தையின் பெயரிலிருந்து பட்டாவையும் ரத்து செய்து விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மனோகரனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (நுகர்வோர் நீதிமன்றத்தில்) வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்த மனோகரனுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. அதன்படி, உரிய முறையில் பட்டா மாற்றம் செய்து தர வருவாய் துறை அலட்சியம் காட்டியதாகவும், சிக்கலை தீர்ப்பதற்கு தாமதப்படுத்தியதற்காக வருவாய் துறையே பொறுப்பேற்க வேண்டும் என்றும், வருவாய் துறையின் சேவையில் குறைபாடு இருப்பதாக கூறியது.
மேலும், துல்லியமான பதிவுகள் மற்றும் சரியான நேரத்தில் பதில்களை வழங்க ஒரு சட்டபூர்வமான அமைப்பான வருவாய்த்துறை கடமைப்பட்டுள்ளது என கூறியதோடு மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்டவரின் நிலத்தின் துல்லியமான அளவை பிரதிபலிக்கும் பட்டா அளவீடு செய்தும், அல்லது அதற்கு மாற்றாக நிலத்தின் சந்தை மதிப்புக்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும், தாமதமாக செலுத்தும் இழப்பீடு தொகைக்கு 9% ஆண்டு வட்டியாகவும், 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாகவும், வழங்கிட வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு அளித்தது.
மேலும் தவறாக பதியப்பட்ட பட்டாவை மாற்றம் செய்து தராமல், காலம் தாழ்த்தியதோடு அலட்சியமாக நடந்து கொண்டதால் மனோகரனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்து உள்ள சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பட்டாவை சரி செய்து வழங்க கால தாமதம் ஏற்படுத்தியதால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ5 லட்சம் அபராதம்: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு appeared first on Dinakaran.