×

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் பாலாறு மேம்பால நடைபாதை சீரமைப்பு: டூவீலர் போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதையை அவசர காலங்களில் டூ வீலர் போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு ஓரிக்கை கீழ் சாலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செவிலிமேடு மேல் சாலை ஆகிய 2 பகுதிகளில் தலா 1 கிமீ நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் சாலை வழியாக அதாவது செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் ஏராளமான வாகனங்கள், இந்த பாலம் வழியாக கடந்து செல்கின்றன. மேலும் புஞ்சையரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால், அதிகளவில் டூ வீலர்களில் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். இதனால், பாலாற்று பாலத்தில் இருந்து கீழம்பி வரையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைக்கு செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த மேம்பாலத்தின் வழியாக பயணம் செய்கின்றனர். இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால், மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதையை விபத்து, வாகனங்கள் பழுது போன்ற அவசர காலங்களில் டூவீலர் போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இருபுறமும் நடைபாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் வாகனங்கள் பழுதாகி பாலத்தின் இடையில் நிற்பது, விபத்து போன்ற அவசர காலங்களில் டூ வீலர்கள் எந்தவித சிரமமுமின்றி இந்த மேம்பாலத்தை கடந்து செல்ல முடியும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் செவிலிமேட்டில் பாலாறு மேம்பால நடைபாதை சீரமைப்பு: டூவீலர் போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Palaru ,Kancheepuram Sevilimit ,Kanchipuram ,Sewilimedu, Kanchipuram ,Kalakatur ,Uthramerur ,Kanchipuram Sevilimit ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அரசு பள்ளி...