×

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் 271 பேர் ₹10.48 கோடியை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர்

புதுச்சேரி, டிச. 5: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் 271 பேர் ₹10.48 கோடி பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளதாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் புதுச்சேரியைச் சேர்ந்த 271 நபர் பல்வேறு முறையில் இணைவழி மோசடிக்காரர்களிடம் சிக்கி ₹10 கோடியே 50 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். அதிலும் ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் பொதுமக்கள் அதிகளவில் பணத்தை இழந்துள்ளனர்.

இதேபோல் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக ஒரு லிங்கை அனுப்பி ₹8 கோடி மேல் பணத்தை இழந்துள்ளனர். மேலும் டெலிகிராமில் டாஸ்க் என்ற முறையில் 16 பேர்களும், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறோம் என்ற முறையில் 11 புகார்களும், புதிய நபர்களிடமிருந்தும் அறிமுகமில்லாத போலி அழைப்புகள் சம்பந்தமாக 42 புகார்கள் பதிவாகி இருக்கின்றது. அதே போல் ஆன்லைன் பர்சேஸ், இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் வருகின்ற லிங்கில் அல்லது விளம்பரங்களில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என நம்பி 29 பேர் பணத்தை செலுத்தி பொருள் அனுப்பாமல் பொருள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வங்கி மேலாளர் பேசுவது போல் ஓடிபி எண்ணை கேட்டு 19 நபர்கள் பணத்தை இழந்துள்ளனர். இணைய வழி மோசடிகள் சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கூறுகையில், இணைய வழியில் வருகிற பெரும்பாலான ஷேர் மார்க்கெட், வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஒடிபி எண்களை கேட்பது, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம், இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது போன்ற இணைய வழி விளம்பரங்களை பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருந்து பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என இணை காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் 271 பேர் ₹10.48 கோடியை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Cyber Crime Police ,Puducherry cybercrime police ,Dinakaran ,
× RELATED வங்கி கணக்கில் இருந்து உடனே பணம் அபேஸ்...