×

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு புதிய கட்டுப்பாடுகள் வருமா? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கலாமா என்பது குறித்தும், பொங்கல் பண்டிகையையொட்டி எடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் 1,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 876 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 2,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது 1003 பேருக்கு கூடுதலாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ேநற்று சென்னையில், 1489 பேருக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரே வாரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ‘‘தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி, அரசு சார்பில் நடத்தப்படுவதாக அறிவித்துள்ள ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஊரிலும் கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்படும். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது போன்று இரவு நேர ஊரடங்கு அறிவிக்கலாமா, மத்திய அரசு அறிவித்தது போன்று சுழற்சி முறையில் அரசு ஊழியர்களை பணிக்கு வர வைக்கலாமா, வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ அதிகாரிகளுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு சார்பில் இன்று  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 600 ஆக இருந்தது.* கொரோனா, ஒமிக்ரான் காரணமாக நேற்று 2,731 ஆக அதிகரித்தது. * சென்னையில் மட்டும், 1489 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு புதிய கட்டுப்பாடுகள் வருமா? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BCM ,G.K. Stalin ,Chennai ,PTI ,CM ,Corona epidemic ,Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...