புதுடெல்லி: அதானி லஞ்ச புகார் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கோரி, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக 6 நாட்கள் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், நேற்று காலை நாடாளுமன்றம் கூடியதும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் படிக்கட்டு முன்பாக போராட்டம் நடத்தினர். இதில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களும், திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் மற்றும் ஆர்ஜேடி, சிவசேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்று பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவாரில் போராட்டம் நடத்தி, மோடிஜியிடம் சில கேள்விகளை கேட்கிறோம். அதானியின் பல கோடி பணம் மூலம் பலன் அடைந்தது யார்? இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் மவுனம் பல விஷயங்களை மிகத்தெளிவாக புரிய வைக்கிறது’’ என்றார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் மசூதியை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றதால் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியான விவகாரத்தை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களவையில் நேற்று எழுப்பினார். அவர் பேசுகையில், ‘‘இது ஒரு திட்டமிட்ட சதி. வன்முறையின் போது போலீசார் அவர்களின் தனிப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி 5 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். பலரை காயப்படுத்தி உள்ளனர். அந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு இடமாக தோண்டிக் கொண்டே போகிறீர்கள். இதற்கு பதிலாக இந்துக்களின் புனிதத்தலமான கைலாஷ் மானசரோவர் மீது கவனம் செலுத்துங்கள். அங்கு ஒருநாள் நம் பக்தர்கள் வழிபடக்கூடாது என தடை விதிக்கப்படலாம்’’ என எச்சரித்தார். கைலாஷ் மானசரோவர் அமைந்துள்ள திபெத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதால் அகிலேஷ் யாதவ் அவ்வாறு கூறி உள்ளார்.
ஒத்திவைப்பு தொடர்ந்தால் ஞாயிறு கூட அவை கூடும்
கடந்த ஒருவார அவை முடக்கத்திற்குப் பிறகு நேற்று மக்களவை, மாநிலங்களவை சுமூகமாக நடந்தது. 75வது அரசியலமைப்பு ஆண்டு விழாவையொட்டி, அரசியலமைப்பு குறித்து இரு அவைகளிலும் 2 நாள் விவாதம் நடத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள், அரசு தரப்பு இடையே சமரசம் ஏற்பட்டு நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பேசுகையில், ‘‘மக்களவையில் அரசியலமைப்பு குறித்து வரும் 13, 14ம் தேதிகளில் விவாதம் நடக்க உள்ளது. இதற்காக சனிக்கிழமையான 14ம் தேதி காலை 11 மணிக்கு அவை கூடும். இனியும் அவையில் இடையூறு ஏற்படுத்தி ஒத்திவைப்புகள் தொடர்ந்தால் ஞாயிற்றுகிழமை கூட அவையை கூட்ட வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தார். மேலும் அனைத்து ஒத்திவைப்பு நோட்டீஸ்களையும் நேற்று அவர் நிராகரித்தார்.
The post அதானி லஞ்ச புகார் விவகாரம்; நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம்: ராகுல் காந்தி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.