×

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி முதன் முறையாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் வீசி தாக்குதல்

பெய்ரூட்: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி முதன் முறையாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வந்தது. ஓராண்டை கடந்து நடந்து வந்த நிலையில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் இறந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார்.

லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டது. எனினும், ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால் நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை வெளியிட்டார். இந்த சூழலில், இஸ்ரேல் விதிமீறலில் ஈடுபட்டு விட்டது என இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், முதன்முறையாக ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா, இதனை இஸ்ரேலுக்கான எச்சரிக்கை என தெரிவித்துள்ளது.

பெய்ரூட் நகர் மீது இஸ்ரேலின் கண்காணிப்பு விமானங்கள் பறந்தன. இதனால், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என அமெரிக்கா, பிரான்ஸ் கூறி வந்த நிலையில், இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கூறுகையில், ‘ஹிஸ்புல்லாவின் விதிமீறலுக்கு பதிலடியாகவே, உடனடி நடவடிக்கையாக, ஒப்பந்தம் அமலாகும் வகையில் இஸ்ரேல் பணியாற்றி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கூறுவதென்றால், தெற்கு லெபனானில் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டபோதோ அல்லது ஆயுத பரிமாற்ற முயற்சிகள் நடைபெறும்போதோ உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது’ என்றார். இதேபோன்று, லிடானி ஆற்றுக்கு வடக்கே தங்களது படைகளை ஹிஸ்புல்லா அமைப்பு நகர்த்த வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கும் என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பேரட்டுக்கு, கிதியோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மசூதிகளில் ஒலிபெருக்கிக்கு இஸ்ரேல் தடை
இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில், ‘மசூதிகளில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் கெடு
அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் அதிபராக நான் பெருமையுடன் பதவியேற்கும் தேதியான ஜனவரி 20, 2025க்கு முன், காசா பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், நரக வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கும். மனித குலத்திற்கு எதிரான அட்டூழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பின்விளைவுகளை ஹமாஸ் அமைப்பு சந்திக்க வேண்டியிருக்கும். எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போரை நிறுத்தவும், காசாவிலிருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேறவும் ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும். இஸ்ரேலுக்கு இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

The post போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி முதன் முறையாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Hizbullah ,Israel ,BEIRUT ,HISBULLAH ORGANIZATION ,Hamas ,Hezbollah ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அறுவை சிகிச்சை