×

3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்: கடற்படை தளபதி தகவல்

புதுடெல்லி: அடுத்த மாதம் 26 ரபேல் கடற்படை விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்கான இரு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கடற்படை தளபதி டி.கே.திரிபாதி கூறி உள்ளார். இந்திய கடற்படை தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரான்சிடம் இருந்து கடற்படைக்கான 26 ரபேல் எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த போர் விமானங்கள் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நிலை நிறுத்தப்படும். இதே போல, பிரான்சிடம் இருந்து கூடுதலாக 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்பட உள்ளன.

ஏற்கனவே இதுபோல 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் உள்ளன. இந்த இரு ஒப்பந்தங்களும் இறுதிகட்டத்தில் உள்ளன. இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பதால் அதிக நேரம் எடுக்காது. அதிகபட்சம் அடுத்த மாதம் இரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இதுதவிர அணுசக்தியால் இயங்கும் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்ட அரசு அனுமதி அளித்ததுள்ளது. அதில் முதல் கப்பல் 2036-37ம் ஆண்டிலும், 2வது கப்பல் 2038-39ம் ஆண்டிலும் தயாராகிடும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய கடற்படையில் 96 போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் இருக்கும். தற்போது 62 கப்பல்கள், 1 நீர்மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

* சீனா, பாகிஸ்தானை கண்காணிக்கிறோம்
அண்டை நாடுகள் குறித்து கடற்படை தளபதி திரிபாதி கூறுகையில், ‘‘சீன கடற்படை, அவர்களின் போர்க்கப்பல்கள், ஆராய்ச்சிக் கப்பல்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவோம். பாகிஸ்தானின் கடற்படை வலிமையை அதிகரிக்க சீனா பெரிதும் உதவி வருவதையும் நன்கு அறிவோம். சீனா உதவியுடன் பாகிஸ்தான் கடற்படைக்கு பல போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. 50 போர்க்கப்பல்களை கொண்ட கடற்படையாக வளர்ச்சி அடைய பாகிஸ்தான் இலக்கு கொண்டிருக்கிறது. அவர்களின் 8 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படைக்கு குறிப்பிடத்தக்க போர் ஆற்றலை தரும். அண்டை நாடுகளிடமிருந்து வரும் அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் வகையில் நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். முக்கிய தொழில்நுட்பங்களை படையில் சேர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கி உள்ளோம்’’ என்றார்.

The post 3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்: கடற்படை தளபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Navy ,New Delhi ,Navy Commander ,DK Tripathy ,Indian Navy Day ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...