×

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கவிழ்ந்த லாரி: டிரைவர் பலி

*கிளீனர் படுகாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் நான்கு வழிச்சாலை மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கொண்டு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்தார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). லாரி டிரைவர். இவர், பெங்களூருவில் இருந்து டேங்கர் லாரியில் டீசலை ஏற்றி கொண்டு தூத்துக்குடி சென்றார். அங்கு டீசலை பங்கில் இறக்கி விட்டு மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

லாரியில் ஓசூரை சேர்ந்த கிரண் கிளீனராக வந்தார். திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் லாரி வந்த போது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு, இரண்டு பாலங்களுக்கு இடையே உள்ள திண்டுக்கல்- பழநி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சந்திரசேகர், கிரண் படுகாயமடைந்தனர்.

இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் உயிரிழந்தார். கிரண் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்தால் திண்டுக்கல்- பழநி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன், தாலுகா எஸ்ஐ சப்இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், மேற்கு எஸ்ஐ லாரன்ஸ் மற்றும் போலீசார், திண்டுக்கல் துணை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். லாரி கவிழ்ந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. மேலும் டீசலை இறக்கிய பின் லாரி விபத்தில் சிக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பால தடுப்பு சுவரை உடைத்து கவிழ்ந்த லாரி: டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Badukam ,Dindigul Bypass Road ,Chandrashekar ,Karnataka ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் அருகே நான்கு...