சென்னை: கனமழை எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடர் கனமழை காரணமாக புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – தாம்பரம் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து புறநகர் பிரிவுகளிலும் மின்சார ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை குறைவான அளவில் இயக்கப்படும். புயலின் போது பயணிகளின் பாதுகாப்பை கருதில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
The post ஃபெஞ்சல் புயல் எதிரொலி; சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைவு! appeared first on Dinakaran.