×

கலவரத்தால் 5 பேர் பலியான நிலையில் சம்பலில் போலீஸ் கொடி அணிவகுப்பு: இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பதற்றம் அதிகரிப்பு


சம்பல்: உத்தரபிரதேசத்தின் சம்பலில் ஏற்பட்ட கலவரத்தாலும், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீ​சார் காயமடைந்​தனர். மேலும், அப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. தொடர் பதற்றம் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சம்பல் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட பலர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.

மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படாத 700 முதல் 800 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வன்முறைச் சம்பவத்தில் இறந்த 5 பேரும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை என்றும், நாட்டுத் துப்பாக்கிகளால் சுட்டதில் அவர்கள் இறந்துள்ளனர் என்றும் சம்பல் மாவட்ட போலீஸ் எஸ்பி கிருஷண் குமார் தெரிவித்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஜமா மசூதியில் தொழுகை நடத்த வருவோரின் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மொராதாபாத் கோட்ட காவல் ஆணையர் அவுஞ்சனேய குமார் சிங் கூறுகையில், ‘அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரச்னைக்குரிய பகுதிகள் யாவும் ட்ரோன் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

13 ஆர்ஏஎப் படை 13 பிஎஸ்சி படை உட்பட 16 பாதுகாப்பு படை பிரிவினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அமைதியை மீண்டும் மீட்டெடுப்பது தொடர்பாக மசூதிகளின் மவுல்விகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அவரவர் மசூதிகளில் மட்டும் தொழுகை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஜமா மசூதிக்கு குறைவான எண்ணிக்கையில் தொழுகை நடத்த வருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். சம்பல் பகுதியில் அமைதி திரும்ப வேண்டி காவல் துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது’ என்றார்.

The post கலவரத்தால் 5 பேர் பலியான நிலையில் சம்பலில் போலீஸ் கொடி அணிவகுப்பு: இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பதற்றம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Police flag march ,Sambh ,Sambal ,Sambh, Uttar Pradesh ,Mughal ,Uttar Pradesh ,flag march ,Sambha ,
× RELATED உ.பி.யின் சம்பலில் மற்றொரு பழமையான கிணறு கண்டுபிடிப்பு