×

இந்திய அணிக்கு கிலி கொடுக்க புதிய வேகத்தில் களமிறக்கும் ஆஸி.

சிட்னி: முதல் போட்டியில் இந்திய அணியின் வேகத்திற்கு பலியானதால் உஷாரான ஆஸ்திரேலிய அணி அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் பியூ வெப்ஸ்டர் என்ற வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை சேர்த்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடந்து வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் டிசம்பர் 6ம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு களமிறங்கியுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடில் புதிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் பியூ வெப்ஸ்டர் என்பவரை ஆஸ்திரேலியா அணி தனது ஸ்குவாடில் சேர்த்துள்ளது. 30 வயதான இவர் தெற்கு டாஸ்மானிய பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு சீசன்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த இரண்டு சீசன்களில் அவர் 1,788 ரன்கள் 51.08 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் ஒன்பதரை சதங்கள் அடங்கும். கேமரூன் பேங்கிராப்ட் மட்டுமே இவரை விட பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இருப்பினும் இவரை ஆஸ்திரேலியா தனது ஸ்குவாடுக்குள் கொண்டு வருவதற்கு முக்கியமான காரணமே, அவரின் வேகப்பந்துவீச்சுதான். அவர் கடந்த சீசனில் மட்டும் முப்பது விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியில் தற்போது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக மிட்செல் மார்ஷ் மட்டுமே உள்ளார். லபுஷேனும் கடந்த போட்டியில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வளிப்பதற்காக மீடியம் பேஸ்ஸில் மூன்று, நான்கு ஓவர்களை வீசினார். இருப்பினும் அது கைக்கொடுக்கவில்லை. கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அணிக்குள் மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை கொண்டு வருவது ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டத்தின் போது பந்து நன்கு ஸ்விங் ஆகும். எனவே இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய செய்ய வெப்ஸ்டரின் பந்துவீச்சும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக பலம் அளிக்கும் எனலாம்.

* வரலாற்று தோல்வி
அடிலெய்ட் ஓவல் மைதானம் இந்திய அணிக்கும் சரி, இந்திய அணி ரசிகர்களுக்கும் சரி பல ரணங்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020-21 சுற்றுப்பயணத்தின் போது அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இதேபோன்ற பகல் இரவு ஆட்டத்தில்தான் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒரு வரலாற்று தோல்வியை பதிவு செய்தது. இந்த தோல்வியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தன்வசமாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை கைப்பற்றுவதன் மூலம் தொடரில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தலாம்.

* லபுஷேனுக்கு ஓய்வு
ஏற்கனவே ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் இப்போது மிட்செல் மார்ஷ் உடன் வெப்ஸ்டரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அணிக்குள் வந்தால் நிச்சயம் ஒரு பேட்டரையோ அல்லது சுழற்பந்துவீச்சாளரையோ வெளியே அமர வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அந்த வகையில் அடுத்த போட்டியில் லபுஷேனுக்கு ஓய்வளித்துவிட்டு வெப்ஸ்டரை ப்ளெயின் லெவலில் சேர்க்க ஆஸ்திரேலியா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post இந்திய அணிக்கு கிலி கொடுக்க புதிய வேகத்தில் களமிறக்கும் ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Aussies ,Sydney ,Beau Webster ,India ,Australia - Gavaskar Cup ,Indian ,Dinakaran ,
× RELATED 3வது டெஸ்டின் 3வது நாளில் 51க்கு 4...