×
Saravana Stores

செவ்விது செவ்விது பெண்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் மருத்துவர் மா . உஷா நந்தினி

பிறப்பிலிருந்து பேதை வரை

பெண் குழந்தைகளுக்கு சில சமயம் பிறந்த சில நாட்களில் பிறப்புறுப்பிலிருந்து மாதவிடாய் போல் சிறிது இரத்தப் போக்கைக் காணலாம். சில சமயம் குழந்தையின் மார்பக காம்பிலிருந்து சில துளி பால் கூட காணலாம். இவையெல்லாம் அம்மாவின் ஹார்மோன்களின் தாக்கத்தில் ஏற்படும் விஷயங்கள். அது தானாகவே சீராகிவிடும். பயப்படத் தேவையில்லை. சொல்லப்போனால், அந்த பெண் குழந்தையின் கருப்பை, மார்பகம் எல்லாம் சீராக உள்ளதின் அடையாளமாக எடுத்துக்கொண்டு சந்தோஷப்படலாம்.

பெண் குழந்தையின் பிறப்புறுப்பை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. வெளியில் தெரியும் உறுப்பிலிருந்து நேரடியாக உள்ளே உள்ள உறுப்புகளான கருப்பை, சிறுநீர்ப்பை போன்றவையுடன் நேரடியாக தொடர்பு உள்ளதால் ஏதேனும் கிருமிகளின் தாக்குதல் சுலபமாக நடக்கக்கூடும். இந்தக் கிருமிகளின் உற்பத்தி ஸ்தானம் பக்கத்தில் இருக்கும் ஆசனவாய்தான். அதனால் பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் பொழுது கவனமாக முன்னிருந்து பின்பாக துடைக்கவோ அல்லது கழுவவோ வேண்டும். சாதாரணமாக குழந்தைகளின் பிறப்புறுப்பை துடைக்கும்பொழுது பின்னிருந்து முன்பாக துடைப்பதுதான் நமது கைகளுக்கு எளிதாக வரும்.

ஆனால், பெண் குழந்தைகளை கையாளும்பொழுது இதை கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு அப்படியில்லை, வெளியில் இருந்து உள்ளே இருக்கும் உறுப்புகளை கோர்க்கும் குழாய்கள் நிறைய வளைவு சுளிவுகளை உடையது. அதனால் அவ்வளவு எளிதாகக் கிருமிகள் தொற்றாது.

குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும் அவசியம். ஒவ்வொரு முறை தடுப்பூசி போடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைக்கோ குழந்தைகள் நல மருத்துவரிடம் செல்லும்பொழுதும் அவர்களின் எடை, நீளம் (அ) உயர, தலையின் சுற்றளவு மற்றும் வளர்ச்சியின் மைல்கற்கள் என்று அனைத்தையும் கவனிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.

உடல் வளர்ச்சியை பொறுத்தவரை பிறப்பு முதல் ஐந்து வயது வரை ஒரே மாதிரிதான் இருபாலினருமே வளருகின்றன. இருப்பினும் ஆண் குழந்தைகள் பிறப்பிலிருந்தே பெண் குழந்தைகளைவிட சற்றே அதிக எடை மற்றும் உயரத்தில் காணப்படுகின்றனர். அதனால்தான் வளர்ச்சியைக் குறிக்கும் வரைபட அட்டவணை இருபாலினருக்கும் தனித் தனியாக உள்ளது. இந்த அட்டவணையை வைத்து வளர்ச்சி சீராக உள்ளதா என்றுதெரிந்துகொள்ளலாம். வளர்ச்சி வயதிற்கு ஏற்ப இல்லையென்றால் ஊட்டச்சத்து குறைவு அல்லது நோய் எதிர்ப்புசக்தியின்மை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை முதலிலேயே கண்டறிந்து சரிசெய்வது அரிது.

அதேபோல் அவர்களின் வளர்ச்சிக்கான மைல் கற்கள் சரியாக உள்ளதா என்று விழிப்புணர்வோடு இருப்பதும் அவசியம். முதல் ஐந்து வருடங்களில் இதிலும் ஆண் – பெண் வேறுபாடுகள் பெரிதாக இல்லை என்றாலும் பேச்சுத்திறன் மற்றும்

உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் பெண் குழந்தைகளிடம் சற்று முன்னதாகவே காணப்படுகிறது. இதை கண்காணிக்க இந்த வயதில் குழந்தை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கான சின்ன அட்டவணையையும் இணைத்துள்ளோம்.இதை வைத்து பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்காணிப்பது முக்கியம். அப்பொழுதுதான் சில-பல நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிய முடியும். உதாரணத்திற்கு ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு முதல் மாதம் அம்மாவின் முகத்தைப் பார்த்து சிரிக்கும் திறனே வந்திருக்காது. இந்தக் குழந்தையை வேகமாக சிகிச்சைக்குள் கொண்டுவந்தால் பேச்சுக் குறைபாடுகளை, செயல்பாடுகளை முடிந்த வரை சீர் செய்ய முடியும்.

இதுபோல அவர்களின் வளர்ச்சியை கண்காணிப்பதுதான் முதல் ஐந்து வருடங்களுக்கு மிக முக்கியம். இதோடு தடுப்பூசிகளை சரியாக கொடுப்பதும் அவசியம். இதைத்தவிர முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பது. அதற்குப் பின்பு போஷாக்கான உணவுப் பழக்கத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். முடிந்த வரை junk உணவைத் தவிர்ப்பது முக்கியம்.

இதைத் தவிர்த்து சளி, காய்ச்சல் என்று எந்த உடல் உபாதை வந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று விரைவாக குணப்படுத்த வேண்டும். அதிக காலம் நோய் வாய்ப்பட்டால் குழந்தையின் ஊட்டச்சத்து குறையும் பின்பு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து திரும்பத் திரும்ப நோய் வரும் சுழற்சிக்குள் போய்விடும். இதனால் குழந்தையின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். இப்படி குழந்தைகளின் உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்வது உளவியல் மற்றும் மனநல வளர்ச்சிக்கு முக்கியமானது . அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

வயது மைல்ஸ்டோன்கள்

பிறந்தவுடன் அழுதல், கை கால் அசைவு

1 மாதம் தலை உய்த்தல்
3 மாதம் மூட்டைபோல் திருப்புதல்,
6 மாதம் கையில் உள்ள பொருளை பிடித்தல், சுயமரியாதை உணர்வு
9 மாதம் சுவாரசியம் காட்டுதல், ஒரு பொம்மையைப் பிடித்தல்
1 வருடம் கொண்டு செல்லுதல், அப்பா, அம்மா சொல்வது
1.5 வருடம் வெவ்வேறு பொருட்கள் கையில் வைத்தல், இரண்டு சொற்களைப் பேசுதல்
2 வருடம் பிரசாரமான சொற்களைப் பேசுதல், ஆடுதல்
3 வருடம் சுயமாக கையை கழுவுதல், பெயருடன் அழைத்தல்
4 வருடம் எளிய விளையாட்டு பொம்மைகள் வகையில் ஆடுதல், விலங்குகளைப் பெயருடன்அடையாளம் காணுதல்
5 வருடம் சுயமாக உடல் கழுவுதல், புத்தகங்களைப் புரிதல், எளிய கதைகள் சொல்வது.

The post செவ்விது செவ்விது பெண்மை! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Usha Nandini ,Dinakaran ,
× RELATED பிறப்பிலிருந்து பேதை வரை