×

வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு; 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு: உத்தவ் தாக்கரே கட்சி முடிவு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வாக்கு இயந்திர மோசடி மற்றும் குளறுபடி காரணமாகவே பா.ஜ கூட்டணி வெற்றி பெற்றதாக சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக 95 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், தற்போது எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பதாக உத்தவ் தாக்கரே கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் எழுதப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் 230 தொகுகளை பா.ஜ கூட்டணி கைப்பற்றியுள்ளது. பா.ஜ கூட்டணியை பொறுத்தவரையில் இந்த வெற்றி லாட்டரி வெற்றி பெற்றது போன்றது.

ஆனால் இது எப்படி சாத்தியம்? வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி எதுவும் செய்யலாம். 95 தொகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெருமளவில் வேறுபாடு காணப்படுகிறது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. வாக்கு எண்ணப்படும் போது வாக்கு இயந்திரங்கள் சார்ஜ் செய்யப்பட்டதும், வேறு சில நடவடிக்கைகளும் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. பா.ஜ கூட்டணிக்கு இவ்வளவு அதிக வாக்குகள் எப்படி கிடைத்தன என்று நாடு முழுவதும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 95 இடங்களில் போட்டியிட்ட உத்தவ் கட்சி, வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது முன்னெப்போதும் இந்த கட்சி கண்டிராத தோல்வி ஆகும். இந்த நிலையில் தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். அப்போது வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க கோரி தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்குமாறு தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில்,’ மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் 26ம் தேதியுடன் முடிந்துவிட்டது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் முன்பு பா.ஜ கூட்டணியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. எனவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய வேண்டும். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

34 தொகுதிகளில் வெற்றியை பறித்த சுயேட்ச்சைகள்
சுயேட்சைகள், சிறிய கட்சிகள் மற்று கூட்டணி கட்சிகள் இடையே நட்பு ரீதியான போட்டி போன்ற காரணங்களால் மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ கூட்டணி வேட்பாளர்கள் குறைந்தது 34 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

The post வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு; 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு: உத்தவ் தாக்கரே கட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : VVPAT ,Uddhav Thackeray ,Mumbai ,Maharashtra Assembly ,BJP alliance ,India alliance ,Shiv Sena ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா தேர்தலில் விவிபேட்,...