×

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

சென்னை: கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு என்று பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றது முதல் அவரின் சீரிய வழிக்காட்டுதலால் தமிழ்நாடு பால்வளத்துறை மிகச்சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2017முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்த தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு (per capita availability) 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. 2022-23ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 இலட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த வழங்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை

2022-23ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 இலட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 இலட்சம் ஆதரவு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85 விழுக்காடு மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் பால்வளத்துறை எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனைச் சிகரங்களை எட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dravida ,Minister RS Rajakanappan ,CHENNAI ,Dravidian model government ,Dairy Minister ,R.S. Rajakannappan ,M. K. Stalin ,Chief Minister of ,Tamil ,Nadu ,Dravidian ,Minister ,RS Rajakannappan ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...