×

திருச்சி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் பெய்த சாரல் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி, நவ.27: திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் நசநசவென இடைவெளியின்றி பெய்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் நவ.30ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதில் திருச்சி மாவட்ட மழையளவு குறித்து பெரிதாக ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த சில தினங்களாகவே திருச்சி மாவட்டத்தில் வானம் மழை மேகங்களுடன், எப்போது மழையாக உருவெடுக்கலாம் என காத்திருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை தூரல்களாக பெய்யத்துவங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இருப்பினும் பெரும் மழையாக பெய்யவில்லை. ‘ஐப்பசி மாதம் அடை மழை’ என்பது கிராமப்புற வழக்கு.

ஆனால் ஐப்பசி மாதம் பெய்யாத அடைமழை கார்த்திகை மாதம் பெய்கிறது என்ற எண்ணம் ஏற்படும் வகையில் நேற்று அதிகாலை துவங்கிய மழை, ஒரு நிமிடம்கூட இடைவெளி விடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதிகனமழையாக அடித்து நொருக்காமல் நசநசவென பெய்த மழை மக்களை எரிச்சலுக்குள்ளாகியது. மழை விட்டதும், அலுவலம், தொழில் ஆகியவற்றை கவனிக்க புறப்படலாம் என நேற்று காலை காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மழைக்காக வீட்டில் முடங்கி இருந்து மக்கள், இதன் பிறகு மழை நிற்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை உணர்ந்து, அவரவர் ரெயின் கோட்டுகளுக்குள் ஒளிந்து கொண்டும், குடைகளின் கீழ் தஞ்சம் அடைந்தும் தங்கள் பணிகளுக்கு புறப்பட்டனர். ஏதோ மழை தேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் போன்று, மழையை பொருட்படுத்தாமல் சாலைகளில் தங்கள் பயணத்தை துவங்கினர்.

திருச்சி மக்களுக்கு இந்த ஈரமான பயணம் நேற்று இரவு வரை நீடித்தது. சொத, சொதவென பெய்த மழையால், சாலைகளில் பயணித்த வாகனங்கள் தங்கள் வேகத்தை குறைத்துக்கொண்டன. வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றதால், பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பயணம் தாமதமானது. பால் பாக்கெட், செய்தித்தாள், அண்ணாச்சி கடைகளுக்கு வந்து சேரவேண்டிய ‘ப்ரஸ்’ காய்கறிகள் அனைத்தும் தாமதமாக வந்தன. மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கும் சில தாழ்வான பகுதிகளில் மெல்ல, மெல்ல மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் மின் தடையும், மரங்கள் சாய்ந்தது போன்ற சம்பவங்களும் நடந்தது. விடாது பெய்த மழையால் சீதோஷ்ண நிலை கடும் குளிரை எட்டியது. வயதானவர்கள், குழந்தைகள் சிரமம் அடைந்தனர். மொத்தத்தில் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்தது.

The post திருச்சி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் பெய்த சாரல் மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,BANGKOK SEA ,DELTA ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் வீடுகளை அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டம்