×

எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நமது நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இணைந்து தடுக்கிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அரசியல்சாசன 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு டெல்லி தல்காத்ரோ மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இணைந்து தலித், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிகளின் வளர்ச்சிப் பாதையைத் தடுக்கும் வகையில் சுவரைப் பலப்படுத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்கவில்லை என்பது எனது உத்தரவாதம். பிரதமர் மோடி இந்த புத்தகத்தை படித்திருந்தால், அவர் தினமும் என்ன செய்கிறாரோ, அதை அவர் செய்ய மாட்டார். நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது. மெல்ல மெல்ல எஸ்சி, எஸ்டி, ஓபிசிகளின் வளச்சிப் பாதையைத் தடுக்கும் சுவர் வலுப்பெற்று வருகிறது.

எங்கள் அரசு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், உணவு உரிமை உள்ளிட்ட சட்டங்கள் மூலம் அந்த சுவரை வலுவிழக்கச் செய்ய முயற்சித்தோம. ஆனால் அவர்கள் (பாஜ) கான்கிரீட்டைச் சேர்ப்பதன் மூலம் அந்தச் சுவரைப் பலப்படுத்துகிறார்கள்.  எனவே, நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது. நீதித்துறை, ஊடகங்கள், கார்ப்பரேட் இந்தியா, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த எத்தனை பேர் உள்ளனர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிக்கள், ஏழை பொது ஜாதி மக்கள், சிறுபான்மையினர் வேதனையில் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். எனவே காயம் எங்கே, எங்கே எலும்பு முறிவு, கலவை உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு சாதிக் கணக்கெடுப்பு மூலம் தரவுகளைப் பெறுவோம். 4-5 சதவீத மக்களை மட்டுமே விரும்புவதால் பாஜ இதற்கு பயப்படுகிறது. இந்தியாவை கட்டுப்படுத்த அவர்கள் அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.

அவர்களின்கட்டுப்பாட்டை உடைக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு. இன்னொன்று 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்குதல் ஆகும். இந்த நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால், இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் நமது நாட்டின் 200 பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* ஜனாதிபதியை அவமதித்தாரா ராகுல்?
நாடாளுமன்றத்தில் நடந்த அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவமரியாதை செய்ததாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக 2 வீடியோகளை பா.ஜ வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதி இருக்கையில் அமர்வதற்கு முன்பே ராகுல் காந்தி தனது இருக்கையில் அமர்ந்து இருப்பது காட்டப்பட்டது.

மற்றொரு வீடியோவில், துணைஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, கார்கே ஆகியோர் ஜனாதிபதிக்கு எழுந்து நின்றபடி வாழ்த்து தெரிவித்தனர். அதில் ராகுல்காந்தியை காட்டவில்லை. இதுகுறித்து பா.ஜ கூறுகையில்,’ ராகுல் காந்தி மிகவும் திமிர்பிடித்தவர். அவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து கூட சொல்லவில்லை. பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்த பெண் என்பதாலா? ஜனாதிபதி நின்று கொண்டு இருக்கும் போது, வாரிசு அமர்ந்திருந்தார். அவர் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளது.

The post எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,RSS ,OBC ,Rahul Gandhi ,New Delhi ,SC ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…