×

பறிமுதல் செய்யப்பட்ட 1852 வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 காவல் நிலையங்கள் சார்பில், திருட்டு, விபத்து உட்பட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமைகோரி வரவில்லை. இந்நிலையில் உரிமை கோராத வாகனங்களை பொதுமக்கள் முன்னிலையில் ஏலம்விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு கணக்கில் செலுத்துமாறு காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராணி, தாசில்தார் சுந்தர்ராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், மோட்டார் வாகன பராமரிப்புத்துறை பொறியாளர் மோகன், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர்  அடங்கிய 6 பேர் குழு அமைக்கப்பட்டது. பின்னர், காஞ்சிபுரம் ஆயுதப்படை பயிற்சி பள்ளி மைதானத்தில் வாகனங்கள் ஏலம்விடும் பணி நேற்று நடந்தது. ஆயுதப்படை டிஎஸ்பி சண்முகம் ஏலத்தொகையை அறிவித்தார். இதையடுத்து வாகனங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் அதற்கான பணத்தை செலுத்தி  எடுத்து சென்றனர். 1817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்கள் என 1852 வாகனங்கள் ஏலம்விடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.  …

The post பறிமுதல் செய்யப்பட்ட 1852 வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District Police Department ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...