×

அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும் மதசார்பற்ற மற்றும் சமத்துவம் ஆகிய வார்த்தைகளை நீக்கம் செய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும் செக்கியூலர்(மதசார்பற்ற) மற்றும் சோசியலிஸ்ட்(சமத்துவம்) ஆகிய வார்த்தைகளை அகற்றக்கோரி சுப்பிரமணிய சாமி மற்றும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘42வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் தான் மேற்கண்ட இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டது. அதனை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘சோசியலிசம் என்ற வார்த்தை அனைவருக்குமான நியாயமான வாய்ப்பு என்று கூட பொருள் ஆகும். அது சமத்துவத்தையும் குறிக்கிறது. அரசியல் சாசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற சொற்கள் மற்றும் பகுதி 3ன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் சரியாகப் பார்த்தால், மதச்சார்பின்மை அரசியலமைப்பின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது’’ என்று கூறி தீர்ப்பை நேற்றைக்கு ஒத்திவைத்து கடந்த 21ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘குறிப்பாக பல்வேறு சிறப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே அரசியல் சாசன முகவுரையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும் செக்கியூலர் மற்றும் சோசியலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்கம் செய்ய முடியாது’’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Subramania Samy ,Ashwini ,
× RELATED காலி மருத்துவ இடங்களை வரும் 30க்குள்...