மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கே 9 எனப்படும் மோப்ப நாய்கள் பிரிவு உள்ளது. அதில் ஆர்லி, ஆரியோ, ஸ்னோ பாய், ராக் என்ற 4 மோப்ப நாய்கள் உள்ளன. இவைகள் வெடி மருந்துகள், ஆயுதங்கள், போதை பொருட்கள் போன்றவைகளை திறமையாக கண்டுபிடிக்கின்றன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் அபூர்வ வகை மற்றும் ஆபத்தான வன உயிரினங்களை கண்டுபிடிக்க திறமையான மோப்ப நாய்கள் இல்லை.இதை போக்க மேலும் 3 மோப்ப நாய்கள் வர இருக்கின்றன.
இதற்காக இந்திய சுங்கத்துறை தலைமையகம், 3 மோப்ப நாய் குட்டிகளை தேர்வு செய்து, பயிற்சிக்காக பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள கஸ்டம்ஸ் கனெய்ன் சென்டர் என்ற பயிற்சி மையத்துக்கு அனுப்பப்ட்டுள்ளன. அங்கு 36 வாரங்கள் சிறப்பு பயிற்சியை முடித்து விட்டு அடுத்தாண்டு மார்ச் முதல் வாரத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில் இணைகிறது. இந்த புதிய 3 மோப்ப நாய்களும் ஷிப்ட் முறையில், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள், குறிப்பாக பயணிகளின் உடைமைகளை கண்காணித்து மோப்பம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இருந்து வரும் போதை பொருட்கள் அதிகமாக கடத்தி வரப்படும் பயணிகளை தற்போது பணியில் உள்ள ஸ்னோ பாய் என்ற மோப்ப நாய் மூலம், சுங்க அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடித்து வருகின்றனர். இந்த 4 நாய்களுக்கும் கூடுதல் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளதால் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக தொடர்ந்து குரைத்து ஒலி எழுப்பி தெரிவிக்கும். ஆனால் வெடிகுண்டு, வெடி மருந்து இருப்பதை கண்டுபிடித்து ஒலி எழுப்பினால், அந்த அதிர்வினால், குண்டுகள் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்துதான் தற்போது மோப்ப நாய்களுக்கு புதிய பயிற்சியாக, சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பது தெரிந்தால் அதே இடத்தில், கால்களை மடக்கி அமர்ந்து கொள்ளும். அதன்பின்பு எழும்பி கால் நகங்களால், தரையை சுரண்டி விட்டு, மீண்டும் அதே இடத்தில் கால்களை மடக்கி அமர்ந்து கொள்ளும். இந்த அடையாளத்தை வைத்து, சுங்க அதிகாரிகள் உடனடியாக அந்த பயணியின் உடமையை முழுமையாக பரிசோதித்து, சந்தேகத்துக்கு இடமான பொருட்களை பறிமுதல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தாய்லாந்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புடைய, 3 கிலோ போதை பொருளை கடத்தி வந்த, இளம் பெண்ணை, ஸ்னோ பாய் என்ற மோப்ப நாய், இவ்வாறுதான் பிடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப்போல் சுங்கத்துறையில் மோப்ப நாய்கள் போதைப்பொருள், வெடி மருந்துகள் போன்றவைகளை கண்டுபிடித்து கொடுத்து வருகிறது. இனிமேல் வன உயிரினங்களையும் கண்டுபிடிப்பதற்கு, சுங்கத்துறைக்கு புதிதாக மோப்ப நாய்கள் வருகின்றன. ஆனால் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை, மோப்ப நாய்களால் கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மோப்ப நாய்கள், அந்த பொருட்களில் இருந்து வெளியாகும் வாசனைகளை வைத்து தான் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும். ஆனால் தங்கத்தில் இருந்து வாசனை எதுவும் வராது என்பதால், மேலும் அது ஒரு உலோகம் என்பதாலும், ஏற்கனவே இருக்கும் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேன் மூலமாகவே கடத்தல் தங்கத்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
The post அபூர்வ வகை, அபாயகரமான வன உயிரின கடத்தலை கண்டுபிடிக்க சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் மேலும் 3 நாய் appeared first on Dinakaran.