×

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுக்க 3 முக்கிய வேண்டுகோள்: சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இரண்டாவதாக, தடுப்பூசி இயக்கத்தில் இணைந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மேலும் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். மேலும் சென்னையில் அரசு பள்ளியில் 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசினார். இதையடுத்து முகாமில் முதல் கட்டமாக ஒரு மாணவி, ஒரு மாணவனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவ ஊழியர்கள் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய மாணவ – மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜனவரி 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு அன்று, நான் பேசிய பதிவு செய்தியாக வெளியிடப்பட்டது. அதில், புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லவில்லை. ஒரு வேண்டுகோளையும் எடுத்து வைத்துள்ளேன். ஒமிக்ரான் வைரசில் இருந்து மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். இன்று 3 முக்கிய செய்தியை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். ஒன்று, ஒமிக்ரான் வைரஸ், டெல்டாவில் இருந்து உருமாறியிருந்தாலும் நோய் தாக்கம் குறைவு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால் வேகமாக பரவக்கூடியது. அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையோடு சொல்ல விரும்புகிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டில் இது வேகமாக பரவும். இதை தடுப்பதற்கான கேடயம் என்னவென்றால், முகக்கவசம்தான். இதுதான் அதை தடுக்கும் முக்கிய கவசமாக இருக்கிறது. கட்டாயம் முகக்கவசம் போட வேண்டும். குறிப்பாக, பொதுஇடங்களில், கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் போட வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தாக வேண்டும். அதைத்தான் வாழ்த்து செய்தியில் கூறி இருந்தேன்.அடுத்து, ஒமிக்ரான் வைரஸ் உருமாறி இருந்தாலும் நம்ம நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசி நல்ல நோய் தடுப்பை கொடுத்துக்கொண்டு வருகிறது. தடுப்பூசி போட்டிருந்தவர்களுக்கு நோய் பாதித்தாலும் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு, தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையும் மிகமிக குறைவு. உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோன்று ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் அந்தளவுக்கு இல்லை என்று சொன்னாலும், இப்போது அந்த நோய் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. பக்கத்து மாநிலங்களான கேரள, மகாராஷ்டிராவில் இது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாட்டில் தொற்று அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதனால்தான், நமது அரசு தடுப்பூசி போடுவதையே ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறது. ஆகவே, மக்களாகிய நீங்கள் அந்த இயக்கத்தில் இணைந்து கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இது இரண்டாவது செய்தி.இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இன்னும் 2வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அன்போடு, பணிவோடு உரிமையோடு, உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இது நான் விடுக்கக்கூடிய மூன்றாவது செய்தி. ஆகவே முதலமைச்சர் என்கிற முறையில் இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக இருந்து அன்போடு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று, பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடியுங்கள். அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.தடுப்பூசி போட்டுக் கொள்வோம், புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாத்திலும் முதலிடம் முதலிடம் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். ஆகவே வரக்கூடிய காலக்கட்டத்தில் இந்த தொற்று நோயில் இருந்து விடுபட்டிருக்கிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்கிற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு நிச்சயமாக தேவைப்படும். அரசோடு நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு கையால் தட்ட முடியாது, இரண்டு கையால்தான் தட்ட முடியும். ஆகவே, நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகர்ராஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வி மற்றும் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.* தமிழகத்தில் 15 – 18 வயது உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.* ஒமிக்ரான் பரவலை தடுக்க முகக்கவசம், தடுப்பூசி மக்கள் இயக்கம், இரண்டாவது தவணை தடுப்பூசி என 3 வேண்டுகோளை முன்வைத்தார்.* அரசோடு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்….

The post தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுக்க 3 முக்கிய வேண்டுகோள்: சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர்...