×

சாமானிய மக்களை காட்டிலும் பிரபலங்களின் திருமண முறிவுக்கு சலிப்பு தான் காரணம்: ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் வீடியோ வைரல்


மும்பை: சாமானிய மக்களை காட்டிலும் பிரபலங்களின் திருமண முறிவுக்கு அவர்களுக்குள் ஏற்படும் சலிப்பு தான் காரணம் என ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பாலிவுட் மட்டுமின்றி திரைத்துறையில் பணியாற்றும் பிரபலங்களின் விவாகரத்து பற்றிய செய்திகள் தினமும் வெளியாகி வருகின்றன. இந்த செய்தியை கேட்டு அவர்களின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தனது மனைவியிடம் இருந்து திருமண முறிவை அறிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் வந்தனா ஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாலிவுட் பிரபலங்களுக்கு இடையே நடக்கும் விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், ‘திரைத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கை சாமானியர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர்களுக்குள் ஏற்படும் துரோக மனப்பான்மையால் விவாகரத்து ஏற்படவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக திருமண உறவில் முறிவு ஏற்படுகிறது. அவர்கள் தங்களது திருமண வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்; இதன் காரணமாக அவர்கள் சலிப்படைகிறார்கள்; அந்த சலிப்பைத் தவிர்ப்பதற்காக மற்றொரு திருமணத்தை நோக்கி செல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற திருமண முறிவுகள், சாதாரண மக்களின் வாழ்க்கையில் அரிதாகவே நடக்கிறது. திரைத்துறையில் இருப்பவர்களின் பாலியல் ஆசைகள் சாதாரண மக்களை விட அதிகமாக உள்ளது.

மற்றொரு நபருடன் (ஆண் அல்லது பெண்) நேரத்தை செலவிடுவது அல்லது அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள். எனக்கும் பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும், எனக்கு வரும் வழக்குகளின் அடிப்படையில் இந்த கருத்தை சொல்கிறேன். மற்றொரு பிரச்னை என்னவென்றால், அவர்களின் திருமண வாழ்க்கையில் தொடர்புடைய மாமியார் அல்லது அவர்களுக்கு நிதி உதவி செய்யும் குடும்ப உறுப்பினர்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கணவன் வீட்டில் சிங்கமாக இருந்தாலும், தந்தையின் முன் பூனையாக மாறிவிடுகிறார். பெரும்பாலும் வாரிசு திரை பிரபலங்கள் மத்தியில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

The post சாமானிய மக்களை காட்டிலும் பிரபலங்களின் திருமண முறிவுக்கு சலிப்பு தான் காரணம்: ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : A. R. Rahman ,Mumbai ,R. One ,Rahman ,Bollywood ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!