×
Saravana Stores

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்ட அதானியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை அதானி மீறியுள்ளார் என்பது இப்போது அமெரிக்காவில் தெளிவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் மோடியும், அதானியும் ஒன்றாக இருக்கும் வரை இந்தியாவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எனவே அதானியை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். அதே நேரத்தில் அவரது பாதுகாவலரும், செபி தலைவருமான மாதபி பூரி புச்சை அவரது பதவியில் இருந்து நீக்கி விசாரணையைத் தொடங்க வேண்டும். வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்புவேன். இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக எழுப்புவோம். அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

மோடி அரசாங்கம் அவரைப் பாதுகாப்பதால், இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார் அல்லது விசாரிக்கப்படமாட்டார் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அதானி பிரச்சினையை நான் பலமுறை எழுப்பியும் இந்தியாவில் அதானிக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதானி பிரச்சினையை நான் எழுப்ப ஆரம்பித்ததில் இருந்து வேறுபல விஷயங்கள் நிறைய நடந்துள்ளன. பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை அழிக்கப்பட்டுள்ளது. இப்போது அதானியும், பிரதமர் மோடியும் ஒன்று என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.

நாங்கள் அவர்கள் அனைவரையும், அவர்களது முழு நெட்வொர்க்கையும் அம்பலப்படுத்துவோம். இதன் முதல் உதாரணம் தான் மாதபி பூரி புச். இந்தியா அதானியின் பிடியில் உள்ளது. அதானி இந்தியாவைக் கட்டுப்படுத்துகிறார். நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். நாங்கள் மெதுவாக வேலை செய்வோம். இறுதியில் இந்த கட்டமைப்பை அகற்றுவோம் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அரசியல்-நிதி-அதிகாரத்துவ நெட்வொர்க், ஏனெனில் இது இந்தியாவின் அரசியல் அமைப்பை ஒருபுறம் பணத்தால் கைப்பற்றுகிறது, மறுபுறம், அவர்கள் லாபத்திற்காக வேலை செய்கிறார்கள்.

இது நாட்டிற்கு எதிர்மறையான சுழற்சி. குற்றமும், ஊழலும் இரண்டு வெவ்வேறு பிரச்சினைகள். ஆனால் அதானி முறைப்படி செயல்பட்டால், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அரசுதான் விசாரிக்க வேண்டும். அதானியைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டும். இந்த பிரச்னை காரணமாக சில்லறை மற்றும் சிறு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை எச்சரிப்பது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது வேலை. அதானி மீதான குற்றச்சாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில் அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களை அதானி உடைத்துள்ளார் என்பது இப்போது அமெரிக்காவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதானி ஏன் ஒரு சுதந்திரமான மனிதனை சுற்றி ஓடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக நமது நாட்டில் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதானி ரூ.2,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சுற்றி வருகிறார். அதே சமயம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் நாங்கள் ெசால்வதைத்தான் நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை: கார்கே
அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், ‘முக்கியத் துறைகளில் ஏகபோகத்தை உருவாக்கி, தேவையற்ற சலுகைகளை அளித்து ஒரு சிலரின் கைகளில் செல்வத்தை குவிக்கும் மோடி அரசின் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் சில நபர்களை லாபம் ஈட்டும் மற்றும் ஊக்குவிக்கும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அதானியால் உருவாக்கப்பட்ட இந்த முழு தீய உறவும், அதற்கு உதவிய கூட்டாளிகள், சமரசம் செய்த அதிகாரிகள், இதில் சம்பந்தப்பட்ட சில அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

மோடியின் கொள்கை ஒரு ஏகபோகம் பற்றியது. எனவே அதானி குழுமத்தின் செயல்பாடுகள், வெளிநாடுகளில் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்தையும் விசாரிக்கும் ஒரு விரிவான நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணை காலத்தின் தேவை. ராகுல் காந்தி குறிப்பிடுவது போல், இந்த விசாரணை அதானியிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான், ஒரு நாடாகிய நாம் நமது மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடியும் ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.8,700 கோடி இழப்பு
அதானி குழுமத்தில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமென்ட்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதானி குழுமம் மீதான அமெரிக்க கோர்ட் குற்றச்சாட்டால், எல்ஐசி நிறுவனம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு வர்த்தக இடையில் ரூ.9,000 கோடி சரிந்தது. வர்த்தக முடிவில் இந்த இழப்புரூ.8,720 கோடியானது

* அதானி குழுமத்தை கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தினார்: ஆம் ஆத்மி
அதானி குழுமம் டெல்லியின் மின் துறையில் நுழைய முயன்றதை அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தியதாக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ அதானி டெல்லியின் மின்சார சந்தையில் நுழைய முயன்றார். ஆனால் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால், அவர்களைத் தடுத்ததால் தோல்வியடைந்தார். டெல்லியில் பாஜ ஆட்சியைப் பிடித்தால், மின் கட்டணம் உயரக்கூடும். அதானி பிரச்னையில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விஷயத்தை முழு சக்தியுடன் எழுப்புவோம்’ என்றார்.

* மோடியின் மதிப்பை கெடுக்கிறார்கள்: பா.ஜ
பா.ஜ செய்தித்தொடர்பாளரும், எம்பியுமான சம்பித் பத்ரா கூறுகையில்,’ராகுல்காந்தியும், அவரது தாயார் சோனியா காந்தியும் மற்றும் காங்கிரஸ் கட்சியும் கடந்த 2002 முதல் மோடியின் மதிப்பை கெடுக்க முயற்சித்து வருகிறார்கள். மோடி பிரதமராக இருப்பதால் இந்தியப் பொருளாதாரம் வலுப்பெறுவதைப் பொறுத்துக் கொள்ள ராகுலால் முடியவில்லை.

எனவே அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் கூறி இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க ராகுல்காந்தி முயற்சித்து வருகிறார். அதானி மீதான வாரண்ட் செய்தியால் நேற்றுமட்டும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததால் 2.5 கோடி முதலீட்டாளர்கள் பெரும் பணத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கும் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தனது நாடகத்தை ராகுல் தொடங்கி, அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப்பார்’ என்றார்.

* மோடி அரசுக்கும் தொடர்பா?
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே கூறுகையில், ‘அதானி மீதானகுற்றச்சாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனமாக உள்ளது. அமெரிக்க குற்றச்சாட்டிற்குப் பிறகு அதானி எரிசக்தி பங்குகளில் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் எதிர்வினையாற்றுகின்றன. ஆனால் இந்திய அரசாங்கம் முற்றிலும் அமைதியாக இருக்கிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மோடி மற்றும் பாஜவின் தொடர்பு இதில் எவ்வளவு?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள்
* 2017: அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ரூ.90,000 கோடி செலவில் மேற்கொண்ட கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதானி பவர் நிறுவனம் ஜார்க்கண்டின் கோடாவில் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்திற்கு ஜார்க்கண்டிலும், வங்கதேசத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

* 2021: அதானி போர்ட்ஸ் நிறுவனம் மியான்மரின் யங்கூனில் சரக்குகள் கையாளும் முனையத்தை உருவாக்க திட்டமிட்டது. இதற்கு மியான்மர் ராணுவத்தின் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இறுதியில் இந்த விவகாரம் மியான்மரில் ராணுவ புரட்சிக்கு வழிவகுத்தது.

* 2022: அதானி கிரீன் நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் காற்றாலை திட்டத்தை கொண்டு வர அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இைத எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.

* 2023 ஜனவரி: அமெரிக்காவின் பங்குச்சந்தை ஆய்வு நிறுவமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் தனது நிறுவனத்தின் பங்கு விலைகளை மிகைப்படுத்த, கடந்த பல ஆண்டாக மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியது.

* 2023 ஆகஸ்ட்: அதானி குடும்பத்தினரும், அவர்களது நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்த பணத்தை கொண்டு, அதானி குழும பங்குகளை வாங்கி, இந்திய பத்திரங்கள் சட்டங்களை மீறியதாக ஓசிசிஆர்பி எனும் உலகளாவிய கார்ப்பரேட் மோசசடி ஆய்வு செய்தி தளம் குற்றம்சாட்டியது.

* 2023 டிசம்பர்: மும்பை தாராவியில் குடிசைகளை இடித்து விட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரும் அதானி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* 2024 செப்டம்பர்: கென்யாவின் நைரோபி விமான நிலைய தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

The post அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல்காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Adani ,Rahul Gandhi ,New Delhi ,US ,Dinakaran ,
× RELATED இந்திய அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம்...