×

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திருவள்ளூர்: ஒசூரில் வழக்கறிஞர் கண்ணனை கத்தியால் வெட்டியதை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் கண்ணன் கத்தியால் வெட்டப்பட்டார். இதனால் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டமாக நிறைவேற்றக் கோரியும் வழக்கறிஞர்கள் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.ஆர்.ராம்குமார் தலைமை தாங்கினர். வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் டி.விஜய்பாபு, சி.ஜெய்சுந்தர், லேமுவேல், முரளி, கூட்டமைப்பின் நிர்வாகிகள் பி.என்.உதயகுமார், பி.சுந்தரேசன், ஸ்ரீதர், மதுரை வீரன், மில்டன், நளினி குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் எஸ்பி ஹரிக்குமார், போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈட்டனர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி: பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை: நீதிமன்றத்தை புறக்கணித்து, ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமையில், செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன், துணைத்தலைவர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில், 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூத்த வக்கில்கள் பார்த்திபன், சாமி, ராஜசேகர், வெற்றிதமிழன், சீனிவாசன் ரமேஷ்குமார், கன்னியப்பன், மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி: திருத்தணியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்தில் காவல் ஆய்வாளர் மதியரசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை செய்த பிறகு நீதிமன்றத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

The post மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kannan ,Osur ,Hosur, Krishnagiri district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...